இத்தாலியின் நோய் இனப்பெருக்க எண் 0.8 அடைந்துள்ளது
தொற்றுதலின் வேகத்தை நோய் இனப்பெருக்க எண் R0 ஊடாக கண்காணிக்கப் படுகிறது. இத்தாலியில் தொற்றுநோயின் ஆரம்ப காலத்தில் நோய் இனப்பெருக்க எண் R0 3க்கு சமமாக இருந்தது. தற்போது, இந்த எண் 0.8 ஆக குறைந்துள்ளது.
அதாவது, ஒவ்வொரு கொரோனாவைரசு நோயாளியும் சராசரியாக ஒரு நோயாளிக்கும் குறைவாகவே தொற்றினை பரப்புகிறார் என்பதே இதன் பொருள். ஜேர்மனியை விட (R0=0.7) இனப்பெருக்க எண் சிறிய அளவில் அதிகமாக இத்தாலி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே நிலையில் கடைப்பிடிக்கவும், அதை இன்னும் குறைக்கவும், “நாங்கள் 5 நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்” என்று இத்தாலி உயர் சுகாதார அவையின் (CSS – Consiglio Superiore di Sanitá) தலைவர் Locatelli கூறியுள்ளார்.
அதாவது, தொடர்புத் தடமறிதல் (contact tracing), நோயறிதல் பரிசோதனைகளின் பயன்பாடு (tamponi), தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், COVID-19 மருத்துவமனைகளின் நிரந்தரத்தன்மை, மருத்துவத்தின் செயல்திறனை செயல்படுத்துதல்.
மேலும், ஒவ்வொருவரின் பொறுப்பான தனிப்பட்ட நடத்தையையும் அவர் சேர்த்துள்ளார்.
தற்போதுவரை நாடு முழுவதும் 1 லட்சத்து அறுபதாயிரம் நோயாளிகள் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். நோயின் அறிகுறி உள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்தும், நாடளவிய ரீதியில் தொற்றுநோயியல் வளைவு வீழ்ச்சியடைந்துக் கொண்டு வருகிறது என்று இத்தாலி உயர் சுகாதர நிறுவனத்தின் (ISS – Istituto Superiore di Sanitá) தலைவர் Brusaferro நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடு முழுவதும் இறுக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டமையால் பல பகுதிகளில் தொற்றுதலின் பரவுதலை கட்டுப்படுத்துவது சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் உரையில் கூறியுள்ளார்.
கொரோனாவைரசினால் அதிகளவு பாதிக்கப்பட்ட Lombardia மாநிலமும் தற்போது நோயின் வீழ்ச்சியைக் கண்டுள்ளது. எனவே, இரண்டாம் கட்டத்தை அனைவரும் “மிகுந்த எச்சரிக்கையுடன்” கையாளுவது அவசியம். போக்குவரத்து, வேலை மற்றும் அன்றாட நடவடிக்கைகளில் எங்கள் வாழ்க்கை அமைப்பை நாம் மறுசீரமைக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர் சுகாதார நிறுவனத்தின் தொற்று நோய்கள் துறையின் இயக்குனர் Rezzo கூறுகையில்:
“இன்னும் நாங்கள் முதலாம் கட்டத்தில் தான் இருக்கிறோம். இனிவரப் போகும் இரண்டாம் கட்டத்தில் இறுக்கமாக, கண்டிப்பாக சமூக இடைவெளி மற்றும் தற்பாதுகாப்பு ஆகியவற்றை முக்கியமாக கடைப்பிடிக்க வேண்டும்”.
தொற்றுதலின் ஆரம்ப காலத்தில் “சிவப்பு மண்டலங்கள்” (Zone Rosse) என்று அதி கூடிய பரவுதல் தோன்றிய சில பகுதிகளை அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறான வரையறை மீண்டும் பயன்படுத்தப்படும் என்றும் அதில் இனி தோன்றக் கூடிய வைரசின் சுழற்சியைக் குறைக்க உடனடிப் பரிசோதனைகள், நோயாளிகளை கண்டறிதல், அவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற ஒரு கட்டுப்பாட்டு நடவடிக்கையை உடனடியாக செயல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.