USA முடக்க நிலையை எதிர்த்து தொடரும் ஆர்ப்பாட்டங்கள்
கொரோனவைரசையடுத்து USA வில் பல நெருக்கடிகள் வெடித்துள்ளன. ஏற்பட்டுள்ள முடக்கநிலையை எதிர்த்து இந்த வாரம் பல நகரங்களில் “அமெரிக்காவை மீண்டும் திறக்க வேண்டும் ” என்ற கருத்துடன் தொடர்ச்சியான சிறிய ஆர்ப்பாட்டங்கள் தோன்றி வருகின்றன.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்களில் Trump இன் குடியரசுக் கட்சி (Republican Party) மற்றும் தீவிர வலதுசாரிக் குழுக்களைச் சேர்ந்த மக்கள் மட்டுமே ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தி நடவடிக்கைகளை மீண்டும் திறக்குமாறும், வழமையான வாழ்க்கைக்கு திருப்புவதற்கும் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த நடைமுறைபடுத்தப்பட்ட விதிமுறைகளை நீக்குமாறு ஆளுநர்களைத் தாக்கி இந்த குழுக்கள் எதிர்ப்புகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் சமூக இடைவெளியை உடைத்து, முக கவசங்கள் அணியாமல், அமெரிக்க கொடிகளுடன் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
சுகாதார நெறிமுறைகளை மீறி நடக்கும் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை தடுக்கும் வகையில் Denver நகரத்தில் மருத்துவர்களும் செவிலியர்களும் தங்கள் சீருடை அணிந்து வீதிகளை மறித்துள்ளார்கள். ஆர்ப்பாட்டாளர்கள் தொடர்ந்து செல்லாத வகையில் அமைதி முறையில் சுகாதார பணியாளர்கள் வீதிகளின் நடுவில் தங்களை நிறுத்திக் கொண்டனர்.
Michigan நகரத்தில் சுகாதார நெறிமுறைகளை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களால் மருத்துவமனையின் வழிகள் பல மணிநேரங்களுக்கு முடக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்ப்பாட்டங்களைப் பற்றி சனாதிபதி Trump கூறுகையில்: “மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது அவர்களின் சுதந்திரம்”. மேலும், சில ஆளுநர்கள் மிக கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் என்று ஆர்ப்பாட்டாளர்களுக்கு ஆதரவாக தன் கருத்தை தெரிவித்துள்ளார்.
ஒருபுறம், Trump அரசாங்கம் மற்றும் வணிக நிறுவனங்கள் பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சுகாதார நெறிமுறைகளை எளிதாக்குவதற்கான நடவடிக்கைகளில் செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கிறது. மறுபுறம், ஆதரவு இல்லாதவர்களும் ஏழை மக்களும் உயிரிழப்பது மற்றும் அவர்களின் பொருளாதாரம் மேலும் பாதிப்படைவதையும் பார்க்கக்கூடியதாக உள்ளது.
நாணயம் போல் இரு பக்கம் கொண்ட அமெரிக்கா எவ்வாறாக இந்த தாக்கத்தில் இருந்து பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மீண்டு வரும் என்பதை வருகின்ற வாரங்களில் கண்காணிக்க வேண்டும்.