“மே 4 இருந்து கட்டம் 2 தொடங்கப்படும்” Conte அறிவிப்பு
இத்தாலியில் கொரோனாவைரசு அவசரநிலை ஆரம்பித்து பல வாரங்கள் கழிந்த நிலையில், தற்போது தொற்றுநோய்ப் பரவல் குறைந்துகொண்டு வருகிறது.
இந்த நிலையில், கட்டம் 2 இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படும் என்றும் “ஒரு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், மே 4 முதல் இத்தாலி மீண்டும் தொடங்கும்” என்று இத்தாலிய பிரதமர் Conte அறிவித்துள்ளார்.
மிகுந்த பாதுகாப்புடன் மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் விதிக்கப்பட்ட விதிமுறைகள் எளிதாக்கும் நடவடிக்கைகள் நடைபெற வேண்டும். இல்லாவிடின் எடுக்கப்பட்ட இந்த முடிவு பயனற்றதாகி விடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வடக்கு மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையே வெடித்த விவாதங்களுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்: “நாங்கள் ஒரு தேசிய திட்டத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்தின் தனித்தன்மையும் கருத்தில் கொள்ளப்படும்”.
எனவே, மாநில வேறுபாடுகள் இருக்கக்கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகபட்ச பாதுகாப்பு நிலைமைகளில் உற்பத்தி நடவடிக்கைகளில் பெரும் பகுதியை மீட்டெடுக்க அனுமதிக்கும் ஒரு தேசிய வேலைத்திட்டத்தில் அரசாங்கத்தின் பணி இடைவிடாமல் தொடர்கிறது.
பணியிடத்திலும், பொது போக்குவரத்துகளிலும் அதிகபட்ச பாதுகாப்பு நிலைமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் ஒரு திட்டமாகவும் இது இருக்கும்.
மேலும், சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைச் சார்ந்து, “Covid மருத்துவமனைகள் நிறுவவும், பிராந்தியங்களுக்கான உதவிகளைச் செயல்படுத்தவும், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மற்றும் கண்காணிக்க தொழில்நுட்ப பயன்பாடுகள் மற்றும் சோதனைகளை சிறந்த முறையில் பயன்படுத்தவும் அரசாங்கம் தொடர்ந்து செயல்படுகிறது என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.
இந்த “மறு தொடக்கம்” எனும் திட்டத்தை வல்லுனர்களின் உதவியோடு முழுமையாக ஆராயப்பட்டு இந்த வார இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.