ஜேர்மனியில் தொற்றுநோய் இனப் பெருக்க எண் R0 1 ஆக உயர்வு
கடந்த வாரம் முதல் ஜேர்மனியில் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன, ஆனால் சமூக இடைவெளி இன்னும் நடைமுறையில் உள்ளது. மேலும், நேற்று முதல் கடைகளிலும் பொது போக்குவரத்திலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில், விதிக்கப்பட்ட நெறிமுறைகள் எளிதாக்கியுள்ளபோது தற்போது தொற்றுநோய் இனப் பெருக்க எண் (R0) 1 ஆக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்கள் இந்த எண் 0.7 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Robert Koch Institut (RKI) அறிக்கையின்படி 6 ஆயிரம் உயிரிழப்புகளும், 1 லட்சத்தி 60 ஆயிரத்திற்கும் மேலாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஒரு புள்ளிவிவரக் கண்ணோட்டத்தில், தொற்றுநோயின் போக்கு நிலையானதாக உள்ளது. குணமாகியவர்கள், புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைகள் கிட்டதட்ட அதே அளவில் காணப்படுகிறன.
அதிபர் Angela Merkel மற்றும் RKI யின் வல்லுநர்கள், அதிக எச்சரிக்கையுடன் சமூகம் மற்றும் பொருளாதாரம் மீதான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை படிப்படியாக அகற்றுவதற்கான திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த திங்கட்கிழமை சிறிய கடைகள் மற்றும் பள்ளிகளை மீண்டும் திறப்பதாக அறிவித்ததன் விளைவாக, அதிக மக்களின் நடமாட்டங்களால் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகரிதுள்ளன என்று சில நிபுணர்கள் கூறியுள்ளனர்.
“மற்ற நாடுகளைப் போலல்லாமல், ஜேர்மனியால் இதுவரை பரவலைக் கட்டுபாடுக்குள் வைத்திருக்க முடிந்தது. இந்த வெற்றியைப் பாதுகாக்க விரும்பினால் மக்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும்,” என்று Koch Institut இன் இயக்குனர் Lothar Wieler எச்சரித்தார். அத்துடன்,கொரோனாவைரசை வெல்ல விரும்பினால், R0 வை 1 குறைவாக கொண்டுவருவது அவசியம் என்று Merkel வலியுறுத்தியுள்ளார்.
ஜேர்மன் கூட்டாச்சி அமைப்பு ஆரம்ப கட்டத்தில் ஒவ்வொரு மாநிலங்களின் நிலைமையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நெறிமுறைகளை நடைமுறை படுத்தவேண்டும் என்று விவாதித்தது. இந்த தீர்மானம் இப்போது மறுதொடக்கக் கட்டத்தில் ஒருங்கிணைப்பை கடினமாக்கி, வேறுபாடுகள் மற்றும் சமச்சீரற்ற தன்மையை உருவாக்குகிறது, அது பொருளாதாரத்திற்கும் சிக்கலானவையாக மாறியுள்ளது.