கொரோனாவைரசு, Maturità சம்மந்தமாக Azzolinaவின் தெளிவுப்படுத்தல்கள்
Maturità சம்மந்தமாக கல்வி அமைச்சர் Azzolinaவிடம் இருந்து சில தெளிவுப்படுத்தல்கள் வந்துள்ளன.
Maturità, கணினி வழியூடாக இல்லாமல், முன்னிலையில் நடைபெறும் என கல்வி அமைச்சர் ஒரு பேட்டியில் அறிவித்துள்ளார். இது வாய்வழித் தேர்வாக மட்டும் அமையும். படித்த பாடங்களில் ஒரு தலைப்பை தெரிவு செய்து விளக்குவதுடன் பரீட்சை ஆரம்பமாகும். ஒரு நாளில் சராசரி 5 மாணவர்கள் பரீட்சையை மேற்கொள்வார்கள். உயர்நிலைப் பள்ளி ஆண்டுகளில் மாணவர்கள் மேற்கொண்ட பாடத் திட்டங்களின் அடிப்படையில் இறுதித் தேர்வுக்கான மதிப்பீடு 60 புள்ளிகளில் இருந்து ஆரம்பமாகும்; வாய்வழித் தேர்வு 40 புள்ளிகள் வரை மதிப்பிடப்படும். இந்தப் பரீட்சையில் தேர்ச்சியடைவது மாணவர்களின் பொறுப்பாகும் என கல்வியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இது ஆசிரியர்களின் முன்னிலையில் நடைபெற இருப்பதால், மாணவர்கள் 4-5 மீற்றர் தூரத்தைக் கடைப்பிடித்தால் முகக் கவசங்கள் அணியத் தேவையில்லை என Azzolina கூறியுள்ளார்.
பாடசாலைக்கு திரும்புவதைப் பற்றி கேட்ட போது செப்டம்பர் மாதம் பாடசாலைக்குத் திரும்புவதற்கான வேலைத் திட்டங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன என்றும் 3 விதமான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்றும் கூறினார். அதாவது, நாம் அதிகபட்சம் இயல்பு நிலைக்கு திரும்புவதே சிறந்தது; கொரோனாவைரசு இன்னும் இருந்தாலும், அது தீவிரமாக இல்லாத பட்சத்தில் சிறிய குழுக்களாகப் பிரிந்து வகுப்பிற்குத் திரும்பலாம்: பாதி மாணவர்கள் வகுப்பிற்குள்ளும், பாதி மாணவர்கள் கணினியூடாகவும்; மூன்றாவது கொரோனாவைரசின் பரவல் தீவிரமடையலாம். ஆனால் செப்டம்பர் மாதம் இயல்பு நிலைக்கு திரும்புவதே எமது குறிக்கோளாகும் என Azzolina கூறியுள்ளார்.
இறுதியாக, அரசாங்கத்தின் மேலதிகத் திட்டங்களைப் பற்றி பேசினார்: “சிறியவர்களுக்காக, நான் உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பிற அமைச்சர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில், பள்ளிகளின் அறைகள், முற்றங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை, சிறுவர்களுக்கான கோடைகால மையங்களாக மாற்றியமைக்க இருக்கின்றேன்“. எதிர்வரும் நாட்களில் இவை அனைத்திற்கான ஆணை வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளார்.