முறையற்ற வேலை ஒப்பந்தங்கள், குடியிருப்பு அனுமதிகளை முறைப்படுத்தல்
முறையற்ற வேலை ஒப்பந்தங்கள், குடியிருப்பு அனுமதிகளை முறைப்படுத்துவதற்கான விண்ணப்பங்களை ஜூன் 1ம் திகதி முதல் ஜூலை 15 வரை அனுப்ப முடியும்.
- இத்தாலிய அல்லது வெளிநாட்டு குடிமகனான முதலாளி, 8 மார்ச் 2020க்கு முன்னர் இத்தாலி நாட்டை வந்தடைந்த இத்தாலி அல்லது வெளிநாட்டவருடன் ஒரு புதிய வேலை ஒப்பந்தம் அல்லது முறையற்ற வேலை ஒப்பந்தத்தை முறைப்படுத்த முடியும்.
- 31 அக்டோபர் 2019க்குள் காலாவதியான குடியிருப்பு அனுமதி வைத்திருக்கும் வெளிநாட்டவர் ஆறு மாத தற்காலிக குடியிருப்பு அனுமதிக்கு (permesso di soggiorno temporaneo) விண்ணப்பிக்கலாம்.
சம்மந்தப்பட்ட துறைகள்
- விவசாயம், மீன்பிடித்தல், மீன்வளர்ப்பு மற்றும் இதோடு தொடர்புடைய வேலைகள்;
- குடும்ப உறுப்பினர்கள், ஒன்றாக வாழாதவர்கள் மற்றும் தன்னிறைவைக் கட்டுப்படுத்தும் நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களை பராமரிக்கும் வேலைகள்;
- வீட்டு வேலைகள்.
விண்ணப்பிக்கும் முறைகள்
இரண்டு முறைகள் உள்ளன:
- உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு அலுவலகத்திற்கு (sportello immigrazione): இத்தாலிய அல்லது ஐரோப்பிய நாடுகளின் குடிமகன் மற்றும் நீண்ட கால ஐரோப்பிய ஒன்றிய குடியிருப்பு அனுமதி கொண்ட வெளிநாட்டவரான முதலாளியாக இருக்க வேண்டும். விவசாயம், மீன்பிடித்தல், மீன்வளர்ப்பு மற்றும் இதோடு தொடர்புடைய வேலைத் துறைகள் சம்மந்தமாக முதலாளியின் வரி விதிக்கக்கூடிய வருமானம் 30.000 யூரோக்களுக்கு குறைவாக இருக்கக்கூடாது. வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு வேலை சம்மந்தமாக, குடும்பத்தில் ஒருவரின் வருமானம் மட்டும் வரும் பட்சத்தில் வரி விதிக்கக்கூடிய வருமானம் 20.000 யூரோக்களுக்கு குறைவாகவும் குடும்பத்தில் பல உறுப்பினர்கள் இருந்தால் 27.000 யூரோக்களுக்கு குறைவாகவும் இருக்கக்கூடாது.
இதற்கான விண்ணப்பங்களை ஜூன் 1ம் திகதி முதல் ஜூலை 15 வரை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை https://nullaostalavoro.dlci.interno.it/ இணையத்தளமூடாக SPID எண்ணைப் பாவித்து அனுப்ப முடியும். விண்ணப்பிப்பதற்கு முன்னர் முறைப்படுத்தப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் 500 யூரோக்களை முதலாளி செலுத்த வேண்டும். குடிவரவு அலுவலகம் (sportello immigrazione) விண்ணப்பங்களை பரிசோதனை செய்து காவல்துறை தலைமையகம் மற்றும் பிராந்திய தொழிலாளர் ஆய்வகத்தின் (Ispettorato territoriale del lavoro) கருத்துக்களைப் பெற்றபின், ஒப்பந்த முறைப்படுத்தலுக்குத் தேவையான ஆவணங்களை வழங்குவதற்கும் குடியிருப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கும் முதலாளி மற்றும் தொழிலாளியை அழைக்கும். அதே நேரத்தில், ஒப்பந்த வேலைக்கான குடியிருப்பு அனுமதி விண்ணப்பத்திற்கான படிவத்தையும் தொழிலாளிக்கு வழங்கி இதனை தபால் நிலையங்கள் வழியாக காவல்துறை தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டும்.
- காவல்துறை தலைமையகத்திற்கு (Questura): 31 அக்டோபர் 2019க்குள் காலாவதியான, புதுப்பிக்கப்படாத அல்லது வேறொரு குடியிருப்பு அனுமதிப்பத்திரமாக மாற்றப்படாத குடியிருப்பு அனுமதி உள்ளவர்கள் அந்த திகதிக்கு முன்னர் சுட்டிக்காட்டப்பட்ட துறைகளில் பணிபுரிந்தவர்கள், தற்காலிக குடியிருப்பு அனுமதியைக் கேட்கலாம் (permesso di soggiorno temporaneo). இது இத்தாலிய பிரதேசத்தில் மட்டுமே செல்லுபடியாகும். விண்ணப்பம் சமர்ப்பித்த திகதியிலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
இதற்கான விண்ணப்பங்கள் தபால் நிலையங்களில் உள்ள “sportello amico” எனும் பகுதிக்குச் சென்று அனுப்பப்பட வேண்டும். சேவை கட்டணம் 30 யூரோவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முன், விண்ணப்பதாரர் F24 எனும் படிவத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்கான செலவுகளை ஈடுகட்ட மொத்தமாக 130 யூரோக்களை செலுத்த வேண்டும். F24 படிவத்தினை வங்கிகள் அல்லது https://www.agenziaentrate.gov.it/portale/web/guest/schede/pagamenti/f24/modello-e-istruzioni-F24 இணையத்தளமூடாக தரவிறக்கம் செய்யலாம்.
இதற்கு அவசியமானவை:
- காலாவதியாகாத கடவுச்சீட்டு அல்லது பிற சமமான ஆவணம் அல்லது சொந்த நாட்டின் இராஜதந்திர பிரதிநிதித்துவத்தால் வழங்கப்பட்ட அடையாளச் சான்றிதழ்;
- மார்ச் 8, 2020க்கு முன்னர் இத்தாலி பிரதேசத்தில் இருக்க வேண்டும்;
- விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது வழங்க வேண்டிய ஆவணங்களுடன் மேற்கூறிய துறைகள் ஒன்றில் பணி புரிந்ததற்கான அத்தாட்சி ஆவணம்.
ஆறு மாதங்களுக்குள் வேலை ஒப்பந்தம் ஒன்று பதிவு செய்தால் தற்காலிக குடியிருப்பு அனுமதியை வேலைக் காரணத்திற்கான குடியிருப்பு அனுமதியாக மாற்றலாம் (permesso per motivi di lavoro).