தமிழ்க்குடியிருப்பின் தொன்மை – வரலாறு சொல்லும் பாடம்-பாகம் 2
பாண்டிய இளவரசியோடு ஆயிரங்கணக்கான தமிழ்க்குடும்பங்கள் விசயன் காலத்திலேயே இலங்கையிற் கால்பதித்தன என்பதை ஏற்றுக்கொள்ளின், தமிழர்களுக்கும் இந்தத்தீவின் உரிமையிற் சரிபாதி இருக்கின்றது என்பதை ஏற்க நேரிடும் என்ற கசப்பான உணர்வினால் மகாவம்சத்தைத் தலையில் தூக்கி ஊர்வலம் நடத்தும்சிங்கள அறிவாளர்களும், பௌத்த சிங்கள வெறிக் கொள்கையாளர்களும், அவர்களின் உச்சக்குறியீடான சிறீலங்கா அரசும், பாண்டிய இளவரசியோடு, ஆயிரகணக்கான தமிழ்க் குடும்பங்கள் தமிழகத்திலிருந்து வந்து இறங்கி நிலைகொண்டதான மகாவம்சச் சேதியை மறைக்கவே முயலுகின்றனர்.
ஆய்வுகள் சொல்லும் சேதி
- குஞ்சுப்பரந்தன் – ஈமத்தாழி
- நாவாந்துறை – மட்கலங்கள்
- பொன்பரப்பி – ஈமத்தாழி
- ஆனைக்கோட்டை – எலும்புக்கூடு
- முத்திரைகாரைநகர் – எலும்புக்கூடு
- கந்தரோடை – தொல்லியல் எச்சங்கள்
- பூநகரி – எலும்புக்கூடுகள்
- பெரியபுளியங்குளம் – பிரமிக்கல்வெட்டுக்கள்
மேற்கண்ட அகழ்வாய்வு, மேலாய்வுக் கண்டுபிடிப்புக்கள் இலங்கையிலே விசயன் காலத்துக்கும் முந்தியதும்,விசயன் காலத்தோடு இணைந்ததுமான தமிழரின் இருப்பை உறுதி செய்கின்றன. இன்று விசயன் என்ற ஒருவன் இருந்தானா? அவன் மனிதனில்லாத இலங்கைக்கு வந்து கால்பதித்தானா? என்பதே கேள்விக்குரியதாகி விட்டது. இது (மகாவம்சம்) வெறும் கட்டுக்கதை யென்றும், பௌத்தத்தின் மேன்மையைச் சொல்வதற்காக துறவிகளாற் காரியம் கருதிப் புணரமைக்கப்பட்ட போலிக்கதையே என்றும் நிறுவும் ஆய்வுகள், சிங்கள வரலாற்று அறிஞர்களிடமிருந்துகூட வெளிவரத் தொடங்கிவிட்டன.
மகாவம்சம் குறிப்பிடுகின்ற நாகர்களுக்கும், இன்றைய தமிழர்களுக்குமுள்ள தொடர்பு தமிழர்களின் தொன்மையை விளக்குகின்றது. தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளிலுள்ள நாகர் கோவில்களும், நாகவழிபாடும் “நாக”… எனத் தொடக்கமும், முடிவும் கொண்ட ஆயிரக்கணக்கான பெயர்களும் தமிழர்களின் இறையியல் நம்பிக்கைகளில் நாகத்துக்குரிய பெரும் மேன்மையும், தமிழர் இலக்கியங்களிற் பேசப்படும் நாகர்களும், நாகங்களும், நாகர்களுக்கும் தமிழர்களுக்குமிடையே உள்ள குருதித்தொடர்பையும், உறவையும் எடுத்து விளக்குகின்றன. எவ்வகையிற் பார்ப்பினும் இலங்கைத்தீவின் தொன்மையிலே தமிழ் மக்களுக்குரிய பதிவு மறுக்கப்பட முடியாததாகும்.
இத்தகையதொரு அழியாத பதிவை இலங்கைத்தீவில் வைத்துள்ள தமிழர்களை, வந்தேறுகுடிகள் என்பதும், ஒரு தேசிய இனமே அல்ல என்பதும், வன்கவர்வாளர்களின் வழித்தோன்றல்கள் என்பதும், கள்ளத்தோணிகள் என்பதும்.
சிறிலங்காப் பாராளுமன்றப் பெரும்பாண்மையினால் தமிழர்களை அழித்தொழித்து “சிறிலங்கா முழுவதும் சிங்கள பௌத்தருடையதே” என்ற பொருந்தாக் கொள்கையை இராணுவ வல்லாண்மை கொண்டு நிறுத்த முயல்வதுமே இன்று இலங்கையில் குருதி ஆறு ஒடுவதற்குக் காரணங்களாக இருக்கின்றன.
மகாவம்சம் கூட இந்தியாவிலிருந்து வந்த பௌத்த துறவிகளின் மொழியான பாளியிலே தான் எழுதப்பட்டது என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். ஏனெனில், அதைச் சிங்களத்தில் எழுதி முடிக்குமளவுக்கு கி.பி 6ஆம் நூற்றாண்டில் சிங்களம் ஒரு வளமான மொழியாக இருக்கவில்லை.
பிற்காலத்தில் வடமொழி, பாளி, தமிழ் மூன்றுங்கலந்தே சிங்களமொழி உருவானது. ஆனால் தமிழ்மொழி, சிங்கள உருவாக்கத்திற்குப் பெருமளவிலான சொற்களைக் கடன் கொடுத்துள்ளதென்பதோடு, மகாவம்சம் பாளியிலே உருவாகுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் கி.பி 2 ஆம் நூற்றாண்டுகளின் அளவிலேயே, பௌத்த காப்பியமான “மணிமேகலை, குண்டலகேசி” போன்ற நூல்களை அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பதும் நினைவு கொள்ளத்தக்கது.
சிங்களவர்களைப் போலவே “பௌத்தநெறி” மீது நம்பிக்கை கொண்டவர்களாகத் தமிழ் மக்களும் இருந்திருக்கின்றார்கள் என்பதை இக்காப்பியங்களிலிருந்து புரிந்து கொள்ள முடியும், எனினும், ஈழத்தமிழர்களுடன் பண்பாட்டு நெருக்கங்கொண்ட தமிழகத்தில் பௌத்தம் கி.பி எட்டாம் நூற்றாண்டின் பின் வீழ்ச்சியடைந்தபோது, தமிழ் ஈழத்திலும் இத்தகைய வீழ்ச்சி நிழ்ந்ததென்பது உண்மை.
விசயன் காலத்திலிருந்தே இலங்கைத்தீவைத் தமிழர்களும், சிங்களவர்களும் மாறிமாறி ஆண்டார்கள் என்பது வரலாற்றுக்குறிப்பு.
வட இந்தியாவிலிருந்து மகேந்திரபிக்கு (மகிந்தன்) வந்து, அப்போதிருந்த மன்னனான தேவநம்பிய தீசனை மதம் மாற்றினான். என்பதும், அன்றிலிருந்துதான் பௌத்தம் இலங்கையிற் பூத்துப் பொலியத் தொடங்கியது என்பதும் மகாவம்சம் கூறும் சேதிதான். எனவே விசயன் என்ற இடைச்செருகல் தொட்டு, தேவநம்பியதீசன் வரையுள்ள மன்னர்களின் இறைநெறி கூடத் தமிழ்மக்கள் பேணும் இறைநெறியான இந்துநெறியாகத்தான் இருந்திருக்கின்றது.
இந்தப் பின்னணிகளெல்லாம் மறுக்கப்பட்டு, சிங்கள பௌத்தக் காட்டாற்று தமிழர்களின் குடியிருப்புகள்மீது பாயத் தொடங்கியதாற்றான் அமைதி விரும்பிகளான தமிழ் மக்களின் கைகளிலே ஆயுதம் ஏறத் தொடங்கியது.
2000 ஆண்டுகளுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் தமிழர்களும், தென்மேற்கில் சிங்களவர்களும், வாழ்ந்து வருகின்றனர். மையப்பகுதியை வலிமை கூடியவர்கள் மாறிமாறிக் கைப்பற்றி ஆண்டு வந்திருக்கின்றனர்.