போர்த்துக்கேயர் கால இலங்கை அரசுகள் – வரலாறு சொல்லும் பாடம் – பாகம் 3
கி.பி 1505இல், போர்த்துக்கேயர் முதல்முதலில் இலங்கையிற் காலடி எடுத்து வைத்தனர்.
அப்போது இலங்கையில் 3 அரசுகள் இயங்கின.
- யாழ்ப்பாண அரசு
- கோட்டை அரசு
- கண்டி அரசு
இந்த மூன்று அரசுகளிலும், பழையானதும் வலுவானதுமாகத் திகழ்ந்தது. தமிழரின் அரசான யாழ்ப்பாண அரசுதான். தரை, கடல் வலுவோடு வெளிநாட்டு ஏற்றுமதி, இறக்குமதிகள் செய்த யாழ்ப்பாண அரசு உயர்ந்திருந்தமையை, போர்த்துக்கேயர் மற்றும் ஊரோடிகளின் குறிப்புகளிலே நாம் பார்க்கலாம். சிங்கள வரலாற்று நூல்களும், இலக்கியங்களும் இதே செய்திகளை எமக்குத் தருகின்றன. இந்த மூன்று அரசுகளினதும் இறைமை வீழ்ச்சிக்கு அன்றைய சிங்கள அரசுகளே காரணமாயின என்பது, இன்றைய சிங்கள பௌத்த வெறிஆட்சியாளர்களினால் விழுங்கப்பட முடியாத, அல்லது விழுங்கத் துடிக்கின்ற கசப்பான உண்மை வரலாறு ஆகும்.
தமிழர்கள் தமது ஆட்சி இறைமையை ஜரோப்பிய நாடுகளிடம் இழந்தாலும் அதற்கான கால்கோளை இட்டது சிங்கள அரசுகள்தான் என்பது, நினைவிலே நிறுத்தப்பட வேண்டிய வரலாற்றின் பதிவுகளாகும். கோட்டை அரசைச் சேர்ந்த மூன்று சிங்கள உடன் பிறந்தார்களுக்குள் ஏற்பட்ட “அரியணை அவா”அந்த அரசைச் சரித்தது. புவனேகபாகு, றைகம்பண்டார, மாயாதுன்னை ஆகிய அந்த மூவர்களுள் ஏற்பட்ட பணிநிலைப் பிணக்குகள் போர்த்துக்கேயரை வலிந்து கோட்டை அரசியலுக்குள் வரவழைத்தன. கி.பி 1597 இன் பிறகு கோட்டையரசின் முடி போர்த்துக்கேயருக்குத்தான் என்று அடிமை முறி எழுதிக் கொடுத்துவிட்டு இறந்தவன் புவனேகபாகுவின் மகள் வழிப்பேரனான தொன்சுவான் தர்மபால. இதனால், கோட்டையரசு போர்த்துக்கேயரின் கைகளில் விழுந்தது.