1983 ஜூலைக்கலவரம், எம் தமிழ் இனத்திற்கு தரும் பாடம்.
37 வருடங்கள் கடந்து இன்றும் எம் ஈழத்தமிழர் மனதில் மாறாத வடுவாக, வலியாக நினைவில் நிற்பது 1983 ல் நடந்த ஜூலை கலவரமாகும்.
தமிழர்கள் வெட்டியும் கண்டதுண்டமாக்கப்பட்டும் உடல்கள் கிழிக்கப்பட்டும் குடியுரிமை பதிவேட்டை கையில் எடுத்து வீடு வீடாக அடையாளம் காணப்பட்டும் தமிழர்களை இன அழிப்பு செய்த நாள்.
1983 ஜூலை மாதம் 23ம் திகதி யாழ்ப்பாணம் தின்னவேலியில் சிறிலங்கா இராணுவ படையணி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 13 சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். அவர்களது உடல்கள் கொழும்புக்கு சென்றபொழுது தமிழர்களே இவர்களை கொன்றதாகவும் பதிலுக்கு தாமும் தமிழர்களை கொல்வோம் என சிங்கள காடையர்கள் வதந்திகளை பரப்பி தமிழர் மீது இன கரு அறுப்பை அரங்கேற்றினார்கள். இதேபோல ஏற்கனவே 1956-1958-1961-1974-1977 ம் ஆண்டுகளில் இனக்கலவரங்கள் தமிழர் மீது நடாத்தப்படடன என்பது வரலாறு ஆகும்.
இலங்கை வரலாற்று ரீதியாக போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் இறுதியாக ஆங்கிலேயர்களாலும் ஆளப்படட நாடு ஆகும். இவர்களது ஆட்சியின்போது தமிழர்கள் தாம் வாழ்ந்த பகுதிகளை தாமே அரசாட்சி செய்தனர். இரு தேசங்கள் இரு மொழிகள் என்பதை மறந்து ஆங்கிலேயர் சிங்களவரிடம் தமிழர்களது சகல ஆட்சி உரிமைகளை சிங்கவரிடம் தாரைவார்த்து சென்றனர். இதனை பயன்படுத்தி சிங்களவர்கள் தமது பௌத்த சிங்கள பேராதிக்கத்தை தமிழர்மீது படிப்படியாக அடக்கியும் ஒடுக்கியும் ஆள முற்பட்டனர். பிரஜா உரிமை மறுப்பு, சிங்கள குடியேற்றங்கள், வேலை வாய்ப்பு மறுப்பு என தொடங்கி தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாடுகளை தடுக்கும் வகையில் தரப்படுத்தல் எனும் முறையை கொண்டுவந்தனர் இது தமிழ் மாணவர் மத்தியில் வேலை வாய்ப்புகளை தடுத்தும் பல்கலைக்கழக அனுமதிக்கும் பெரும்தடையாக இருந்தது இந்த காலத்தில்தான். தமிழ் இளைஞர், மாணவர்கள் சிங்கள அரசின் மீது வெறுப்படைந்தனர். இவற்றை பாராளுமன்றத்துக்குள்ளேயும் வெளியேயும் சாத்வீக முறையிலும் அகிம்சை வழியிலும் சத்தியாகிரக போராட்டங்களை நடத்தி தமது எதிர்ப்புகளை தமிழ் தலைமைகளும் தமிழ் மக்களும் காட்டிய பொழுது அவர்கள் மீது ராணுவ அடக்கு முறைகள் கொண்டு கடும் சட்டங்களை பாவித்தும் குறிப்பாக பயங்கரவாத தடை சட்டம் மூலம் தமிழர்களின் அன்றாட செயல்பாடுகளுக்கும் அவர்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டும் அடக்கியொடுக்கப்பட்டு வருகின்றமை தொடர்கிறது.
இதனால் பெரும் ஏமாற்றம் அடைந்த தமிழ் தலைமைகள் ஒன்று கூடி 1976 ம் ஆண்டு மே மாதம் 14 ம் திகதி வட்டுக்கோட்டை பண்ணாகம் எனும் இடத்தில் இனிமேலும் சிங்களவர்களோடு இணைந்து எந்த உரிமைகளையும் பெற முடியாது என தீர்மானித்து அன்று நடந்த மகாநாட்டில் தமிழர் தம்மை தாமே ஆளுவதன் மூலம் சுதந்திரமாக வாழ்வதற்கு தனி தமிழீழமே பொருத்தமான தீர்வு என பிரகடனப்படுத்தி தமிழீழம் அமைப்பதற்கு ஆன போராட்டங்களை நடத்துவதற்கு இந்த மாநாட்டின் மூலம் சகல கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் மக்களுக்கும் மகா நாட்டு செயற்குழு ஆணை பிறப்பித்தது.
இந்த தீர்மானத்தின் பின் தமிழ் மக்களிடையே குறிப்பாக தமிழ் இளைஞர் இடையே இதற்காக சகல வழிகளிலும் போராடுவோம் என்ற மனோநிலை பேரெழுச்சியாக எழுந்தது இதன் பிரதிபலிப்பே 1983 ஜூலை மாதம் 23 ம் திகதி தின்னவேலியில் ராணுவத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எனலாம்.
தன்னை கொல்லவந்த பசுவைகூட கொல்லலாம் என இதிகாசங்களே பறை சாற்றுகின்றன அடிக்கு அடி ஊனுக்கு ஊன் என பல தத்துவங்கள் மனித வாழ்வில் உண்டு. எங்கள் பாட்டன் பூட்டன் எமது பரம்பரைகள் ஆண்ட மண்ணை தாம் ஏன் ஆள முடியாது என்ற இலட்சியத்தில் தமிழ் இளையோர் ஒன்றிணைந்து எதிரிக்கு எதிரியின் மொழியிலேயே பதிலடி கொடுத்தனர். இந்த போராட்டங்களும் தியாகங்களும் தான் இந்த ஜூலை கலவர நாளில் நீறு பூத்த நெருப்பாக தமிழர் மனதில் ஓர் கொதிநிலை அரசியல் விடுதலை போராட்டமாக இன்றும் நம் எல்லோர்க்கும் நல்ல பாடமாக தொடர்கிறது.
முல்லை வாசன்