தமிழால் இணைவோம்!
தமிழ்த்தேசியக் கருத்தியலில் மொழி என்பது தமிழ்த் தேசியத்தின் உரிமைக்கான அடிப்படைக் கூறாக இருக்கிறது. கருத்துக்களைப் பகிர்வதற்கான ஊடகமாக எழுந்த மொழி இன்று தொடர்பாடலுக்கான கருவியே மொழி என்ற எண்ணக் கருவை உடைத்து குறித்த மொழிசார் குழுமத்திற்கான அரசியல், கலை, வரலாறு, குமுகநிலை போன்றவையை உள்ளடக்கிய பண்பாட்டுத்தளமாகவும் அடையாளமாகவும் இயங்குகிறது. குறிப்பிட்ட மொழியினைப் பேசுகின்ற இனத்தினுடைய வாழ்வியல் கூறுகளைத் தன்னகத்தே கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றுத் தொடர்ச்சியில் இனத்தின் இருப்பினை உறுதிப்படுத்தி வந்த மொழியானது, சில இனங்களின் இருப்பினைக் கேள்விக்குள்ளாக்கியுமிருக்கிறது. “ ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அந்த இனத்தின் மொழியை அழித்துவிடு ” என்ற திட்டமிடலே அந்த இனத்தின் இருப்பினை கேள்விக்குள்ளாக்குகிறது. மரபுவழித் தொன்மையான தமிழ்மொழிக்கு தமிழ் என்ற மொழியும் அதனூடாக தமிழர் என்ற இனத்தையும் காக்கவேண்டிய இரட்டைச்சுமை இருக்கிறது. மரபுவழித்தேசிய இனமாக எம்மை நிலைநிறுத்துவதற்கு இன்று எம்மிடம் எஞ்சியுள்ள வன்மையான கருவி மொழியேயாகும்.
அந்த வகையில் மொழியின் இருப்பின் அவசியத்தை கருத்தில் கொண்டு புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தமிழினம் தனது அடையாளங்களை இழந்து விடக்கூடாது என்ற எமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனைக்கு அமைவாக தமிழ் மொழியை தொடர்ந்து தமது பிள்ளைகளுக்கு ஊட்டுவதற்கும் தமது பாண்பாட்டை பேணுவத்திற்கும் கடும் முயற்சியை எடுப்பதைக் காணமுடியும். சமநேரத்தில் புலம்பெயர் தேசத்தில் தமது மொழியை 3ம் தலைமுறையிடம் கொண்டுசெல்ல வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்கள். இதன் வெளிப்பாடாக தமிழ் தேசிய கட்டமைப்புக்களால் தமிழ் மொழிக் கல்வியை தமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் அனுசரணையுடன் இளைய தலைமுறையினருக்கும் எடுத்துச் செல்வதற்காக பலநாடுகளிலும் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன. அந்த வகையில் இத்தாலி நாட்டில் தாய்மொழி கற்பது மற்றும் நடைமுறையில் அந்த மொழியை பேசுவதின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டு வரும் சேவையே “இத்தாலி தமிழ் கல்விச்சேவை” ஆகும்.
இனமொன்றின் இருப்பினையும் இருப்பின்மையினையும் நிலைநிறுத்துகின்ற இனம் சார் அடையாளத்தை இனத்தின் குறிகாட்டியாக்கி இனத்தின் இருத்தலை நீட்டிக்கின்ற பெரும் காரணி மொழியாகும். அந்த இருத்தலின் தொடர்ச்சியில் தமிழ்த்தேசியம் முனைப்புப் பெறும். தமிழர் தமது தேசத்தை அடைவதற்கான கருத்தியலான தமிழ்த்தேசியக் கருத்தியல் அதன் மீதான வல்லாண்மையைத் தாண்டி நிலைபெற்றிருப்பதில் தமிழ் மொழியின் பங்கு முதன்மையானது. மொழி என்ற அச்சாணியைச் சுற்றியே தேசம், பண்பாடு என்ற இனவியல் கூறுகள் அடையாளப்படுத்தப்படுகின்றன. வல்லாண்மையும், இன விடுதலைக்கான எழுச்சியும் மோதிக் கொள்ளும் தளத்தில் பல மொழிகள் காணாமலாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழ்மொழியானது வல்லாண்மை எதிர்ப்பின் குறியீடாக மரபுவழி மொழியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டதுடன் அந்த மொழி சார்ந்த மக்களை மரபுவழித் தமிழ்த் தேசிய இனம் என்ற அடையாளத்தையும் உருவாக்கியிருக்கிறது. மொழிச்சிதைப்பினூடான இனச் சிதைப்பின் முயற்சியில் பகைவர்களை காலங்காலமாக எதிர்கொண்டு, கொற்றம், கொடி, நிலம் என்ற இனத்தின் காப்பு வெளிகளை இழந்திருப்பினும் இன்று வரைக்கும் செம்மொழியாக தன்னை அடையாளப்படுத்தியுள்ளது.
அவ்வாறான தமிழ் மொழியை வளர்க்கும் மிக முக்கியமான சேவையை ஆற்றிவரும் இத்தாலி மேற்பிராந்திய தமிழ்க் கல்விச் சேவையின் கீழ் இத்தாலி மேற்பிராந்தியத்திலுள்ள 7ற்கு மேற்பட்ட பிரதேசங்களில் 9ற்கும் மேற்பட்ட திலீபன் தமிழ்ச் சோலைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு திலீபன் தமிழ்ச் சோலைகளிலும் மழலையர்நிலை, பாலர்நிலை, வளர்தமிழ் 1 இருந்து 12 வரையான நிலைகள் மற்றும் பட்டயக்கல்வி கற்கைநெறி போன்றன கற்பிக்கப்படுவதுடன் 250 க்கும் மேற்பட்ட மாணவர்கள், 45 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், என வார இறுதி நாட்களில் கற்கைநெறிகளை நடத்தி தமிழர் மேம்பாட்டுப் பேரவையின் பாடத்திட்டங்களுடன் அரையாண்டுத் தேர்வு, புலன்மொழி வளத்தேர்வு, அனைத்துலகத் தேர்வு போன்றவற்றையும் நடாத்தப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் பாடசாலை நடாத்துவதற்கு உகந்த சூழல் இல்லாத பிரதேசங்களில் மாணவர்களுக்கு இணையவழி மூலம் கற்ப்பித்தல் நடைபெறுகிறது. மேலதிகமாக ஓரளவு தமிழ் எழுத வசிக்கக்கூடிய 16 வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு இணையவழிஊடாக இரண்டுவருட கற்கை நெறியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . Verona, Firenze போன்ற பிரதேசங்களிலும் புதிய திலீபன் தமிழ்ச் சோலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்க்கல்வி மட்டுமல்லாது எமது தேசிய வெளியின் மீட்டெடுப்பின தொடக்கமாக தேசியம்சார்விடயங்களிலும் இத்தாலி மேற்பிராந்திய தமிழ்க் கல்விச் சேவையானது செயற்பட்டு வருகிறது.
மொழியெல்லாம் ஒரு சிக்கலா என்று இன்றைக்கு பலபேர் கேட்கலாம். ஆனால் மொழி தேசங்களை கூறுபோடும் வல்லமை படைத்தது என்பதை நாம் உணர்ந்துதான் ஆகவேண்டும். தமிழ் இலக்கியமாகட்டும், அன்றாடவாழ்வியலாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், துல்லியமாக தமிழில் பேச, தமிழில் எழுத, தமிழைக் கேட்டு புரிந்துகொள்ள திறமை உடையவர்களாக எம் புலம்பெயர் தேசத்து இளையோரையும் வளர்த்தே ஆகவேண்டும். அவ்வாறான நோக்கின் வடிவமாகத்தான் இத்தாலி மேற்பிராந்திய கல்விச் சேவையின் கீழ் இயங்கும் திலீபன் தமிழ்ச் சோலைகளில் தமிழ் மொழி கற்கும் மாணவர்கள் அனைவரும் எழுத, வாசிக்க, கேட்டுப் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக மாற்றும் வல்லமையுடன் ஆசிரியர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமல்லாது இத்தாலி மேற்பிராந்திய கல்விச் சேவையானது 24 ஆண்டுகளைக் கடந்து 25வது ஆண்டில் நடைபோடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஈழத்தமிழர்களுக்கு தமிழ் என்பது ஒரு மொழி என்பதை தாண்டி அது அவர்களின் இன, பண்பாட்டு, அரசியலின் அடையாளமாகவும் முகம்கொடுக்கும் இனவழிப்பிற்கு எதிரான ஆயுதமாகவும் இருக்கிறது. பண்பாடும் மரபும் மொழியினால் கட்டியமைக்கப்பட வேண்டும். மதத்தினால் கட்டியமைக்கப்படல் கூடாது. அது தேசியக் கொள்கையினைச் சிதைக்கக்கூடியது. ஆனால் இப்பொழுது மொழிக்கான படைப்பு வெளி மிகப்பிரமாண்டமான வெளியாக உருமாறியிருக்கிறது. அந்த வெளியின் வீரியத்தில் எமது மொழியும் தேசியக் கருத்தியலும் எமது இனத்தின் அடையாளத்தை மீட்டெடுக்கவேண்டிய கட்டத்திலிருக்கின்றன. இனவிடுதலைக்கான வேறு வழிகள் பேசாநிலையிலிருக்கும் இவ்வேளையில் மொழி அந்த இடைவெளியை நிரப்ப வேண்டியது காலத்தின் கட்டளையாகும்.
அதனால் உங்கள் வீட்டின் பாலகர்களை தமிழ்க்கல்வியில் இணையுங்கள். புதிய கல்வியாண்டுக்குரிய கற்பித்தல்கள் வரும் செப்டம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படும். உங்களுக்கு அருகிலுள்ள திலீபன் தமிழ்ச் சோலைகளில் உங்கள் பிள்ளைகளை இணைப்பதன் மூலம் தமிழ்க்கல்வி மட்டுமல்லாது விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி, ஓவியப் போட்டி, பண்பாட்டு நிகழ்வுகள் போன்றவற்றில் பங்குபற்றச் செய்து பேச்சு, நடனம், பாட்டு, ஓவியம், விளையாட்டு என பன்முகத் திறன் உள்ளவர்களாகவும், தாய்மொழிப்பற்றுடனும் இனப்பற்றுடனும் எமது பண்பாட்டு விழுமியங்களையும் பாதுகாக்கும் பிள்ளைகளாகவும் இளைய தலைமுறையினர் வளர வாய்ப்பளியுங்கள். தமிழ் மொழியை பிழையற பேசவும் எழுதவும் தெரியாமல் இளைய சமுதாயத்தை வளர்த்து விடுவதால் ஏற்படும் விளைவு பாரதூரமானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டியவர்களாக உள்ளோம். தாய் மொழியை புறக்கணித்து பிள்ளைகளின் இயல்பான சிந்தனையை சிதைக்கிறோம் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தாய்மொழி மீதான பற்று ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்தவேண்டும். நமது மொழியை நேசிக்கவும், பிற மொழிபேசும் மக்களை மதிக்கவும் கற்றுக்கொள்ள அனைவரும் உறுதியெடுக்க வேண்டும்.
மொழியும் இனமும் நம் இரு கண்கள். தமிழால் இணைவோம்!!