தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்
காலம் காலமாக பெண்கள் பிறந்ததும் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, பின்பு கணவனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, வீட்டு கடமைகளை புரியும் ஒரு இயந்திரமாக தான் பார்க்கப்பட்டார்கள். அவர்களின் ஆற்றலையும், விவேகத்தையும் புறக்கணித்து, எமது சமூகம் அவர்களை ஒரு ஒடுக்குமுறை நிலையில் தான் வைத்திருந்தார்கள். பெண்ணால் சுயாதீனமாக வாழத் தெரியாது என்ற தவறான கருத்து எமது சமூகத்தில் வலுவாகப்பகிரப்பட்டது.
சமுதாயம் தான் பெண்களை இப்படி நிராகரித்தார்கள் என்றால், சிங்கள இனவாதிகள் இன்னும் மோசமான கொடூரங்களை எமது ஈழப் பெண்கள் மீது மேற்கொண்டார்கள். பாலியல் வன்முறைகளும், மனித உரிமை மீறல்களும், என ஒரு முடிவற்ற பட்டியல் எமது பெண்கள் அனுபவித்த கொடுமைகள். திட்டமிட்ட இனப்படுகொலையின் முதல் இலக்கே எமது ஈழப் பெண்கள். அவர்களை அழித்து விட்டால், எமது இனம்வேரோடு அழிந்துவிடும் என்பதை புரிந்துகொண்ட சிங்கள பேரினவாத அரசாங்கம், எமது பெண்களை கொடுமைப்படுத்தி, அவமானப்படுத்தி, கொன்று குவித்தார்கள்.
இன்னும் தாங்கள் பொறுத்திருந்தால் வரலாறு தங்களை மன்னிக்காது என, தமிழ் பெண்கள் எழுச்சி கொண்டு நிமிர்ந்துநின்றார்கள். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சமூகத்தால் விதிக்கப்பட்ட ஒடுக்குமுறைகளை உடைத்துவிட்டு, பெண்ணால் கூட சாதிக்க முடியும் என்று நிறுவினார்கள். இந்த புரட்சிக்கு அடித்தளத்திற்கு வித்திட்டது எமது தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் தான்.
பெண்கள் என்றாலே ஆண்களை விட தாழ்ந்தவர்கள் என்ற கருத்து வேரூன்றி இருந்த எமது சமூகத்தில், பெண் எந்த விதத்திலும் குறைந்தவள் இல்லை, பெண் என்றால் ஆணுக்கு நிகரானவள் என்று ஈழத்து பெண்களுக்கு புது யுகம் படைத்தவர் 2ம் லெப். மாலதி.
மன்னாரைச் சேர்ந்த 2ம் லெப் மாலதி தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் முதல் பெண் மாவீரர். இந்தியாவின் அமைதி காக்கும் படை ஆக்கிரமிப்பு படையாக மாறியபோது எதிர்த்து கோப்பாயில் 1987 ஐப்பசி 10 இடம்பெற்ற மோதலின் போது விழுப்புண்ணடைந்து, இரண்டகர்களின் கையில் சிக்கி துன்புறப்பட்டு உயிர்வாழ்வதை விட, இறப்பது மேல் என எண்ணி சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.
2ம் லெப் மாலதி தமிழீழப் பெண்களுக்கு ‘விடுதலை’ எனும் பாதையை வழி காட்டி விட்டு வித்தாகி வீழ்ந்தார். அன்றிலிருந்து 2ம் லெப். மாலதியின் நினைவுதினமே “தமிழீழ பெண்கள் எழுச்சி நாளாக” கொண்டாடப்பட்டுவருகிறது.
ஈழப் பெண்களின் விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு பெரும் பங்கு உண்டு. ஆணுக்கு பெண் நிகர் என்பதை கருத்தில் எடுத்துக் கொண்டு, 1985 ஆவணி பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் தொடங்கப்பட்டது. ஏராளமான பெண்கள் ஒன்று சேர்ந்து, தமது இன்னுயிர்களை தமிழீழத்திற்காக தியாகம் செய்தார்கள். படையணியாகமட்டுமல்லாமல் அவர்களின் ஆளுமையாலும், விவேகத்தாலும் படிப்படியாக முன்னேறி, விடுதலைப் புலிகளின் கட்டமைப்புகளிலும் உயர்ந்த நிலையை அடைந்தார்கள். பெண் என்றாலே இளக்காரமாக பார்த்த எமது சமூகத்திற்கு, பெண் போராளிகள் பெண்களுக்கு ஒரு புதிய வரையறையை விதித்தார்கள். இதன் மூலமே ஒரு சமூக மாற்றமும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தக் கூடியதாக இருந்தது.
இன்று கூட ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பும், தமிழீழப் பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்து;
ஆயிரம் நாட்கள் தாண்டியும், சிங்கள அரசால் காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார்களும், சகோதரிகளும், மனைவிகளும் நீதிக்காகவும், நீயாயத்திற்காகவும் சுடும் வெயிலிலும், பசியோடும் பட்டினியோடும் இன்னும் போராடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்.
ஈழத் தமிழர்களின் விடுதலை வரலாற்றில் பெண்ணின் பங்கு அளப் பெரியது என்பதை ஒரு போதும் நாம் மறந்துவிடக்கூடாது. மேற்கத்தேய நாடுகளில் கூட பெண்களை அங்கீகரித்து வழங்க முடியாத உரிமைகளை, எமது பெண் போராளிகள் ஈழப் பெண்களுக்காக பெற்றுக் கொடுத்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. விடுதலைப் புலிகளால் விதைக்கப்பட்ட அடித்தளத்தை வழிகாட்டியாக கொண்டு நாமும் பெண்களின் விடுதலை நோக்கிய பாதையிலே தொடர வேண்டும்.
“பெண்விடுதலை என்ற இலட்சியப் போராட்டமானது, எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை.“
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன்