கொரோனாவைரசு அவசரகாலத்திற்கான புதிய ஆணை
26 அக்டோபர் முதல் 24 நவம்பர் வரை கொரோனாவைரசு அவசரகாலத்திற்கான புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் உள்ளடக்கங்கங்கள்:
Bar, pub, உணவகங்கள், பனிக்கூழ் கடைகள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. ஒரே குடும்பத்தில் வசிக்காத நபர்களாக இருக்கும் பட்சத்தில், ஒரு மேசையில் நான்கு நபர்கள் மட்டுமே அமர முடியும். வீட்டுக்கு உணவு எடுத்துச் செல்லும் சேவை நல்லிரவு 12 மணி வரை அனுமதிக்கப்படுகின்றது. நபர்களுக்கு இடையிலான ஒரு மீட்டர் தூரத்தைக் கடைப்பிடித்து, மருத்துவமனைகள், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் உள்ள உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்யும் கடைகள் அனுமதிக்கப்படுகின்றன.
வேலை, படிப்பு, சுகாதார காரணங்கள், அவசியமான சூழ்நிலைகளை தவிர தேவையற்ற காரணங்களுக்காக பொது அல்லது தனியார் போக்குவரத்து வழிமுறைகளால் நகரக்கூடாது என்று அனைவருக்கும் கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது.
குழந்தைகளுக்கான பள்ளி, ஆரம்பப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளுக்கான நேரடி வகுப்புகள் நடைபெறும் (scuola materna, scuola elementare, scuola media). உயர்நிலைப் பள்ளிகள் (scuola superiore) 75 சதவீதம் தொலைதூரக் கணினிவழிக் கல்வியாகவும், 25 சதவீதம் நேரடி வகுப்புகளாகவும் நடைபெறும்.
திரையரங்குகள், நாடக-கச்சேரி அரங்குகள், சினிமாக்கள் அனைத்திலும், வெளிப்புறங்கள் உட்பட, நிகழ்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் நடன மையங்கள் போன்ற அனைத்து மையங்களும் மூடப்பட்டுள்ளன. பந்தய விளையாட்டு நிறுவனங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பெரும் கூட்டங்கள் உருவாக்கக்கூடிய நகரப் பகுதிகளில், அனுமதிக்கப்பட்ட வணிகங்கள் மற்றும் வீடுகளுக்குச் செல்வதை தவிர, இரவு 9 மணிக்குப் பிறகு நகர்வதை தடை செய்ய முடியும்.
அனைத்து விளையாட்டு நிகழ்வுகளும் போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இத்தாலிய தேசிய ஒலிம்பிக் குழு (CONI) மற்றும் இத்தாலிய பாராலிம்பிக் குழுவால் (CIP) அங்கீகரிக்கப்பட்ட தனிப்பட்ட மற்றும் குழு விளையாட்டு, பயிற்சி, போட்டிகள் அனுமதிக்கப்படுகின்றன. தேசிய அளவிலான போட்டிகள் தவிர, தொடர்பு ஏற்படக்கூடிய அனைத்து விளையாட்டுகளும், அனைத்து அமைச்சூர் போட்டிகளும் தடைசெய்யப்பட்டுள்ளன.
தனியார் வீடுகளில் கூட்டுறவு இல்லாத பட்சத்தில் (அதாவது ஒரே குடும்ப வீட்டில் வசிக்காதவர்கள்) பாதுகாப்புச் சாதனங்களைப் பயன்படுத்துவது “கடுமையாக பரிந்துரைக்கப்படுகிறது”. கூட்டுறவு அற்ற நபர்களை வீட்டிற்கு அழைப்பது தவிர்ப்பது நல்லது.
பொது வணிகங்களுக்குள் ஒரே நேரத்தில் அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையை நுழைவாயிலில் குறிப்பிட வேண்டும்.