வன்னித் தமிழன் மாவீரன் பண்டாரவன்னியன்-பகுதி 2
ஆங்கிலேயர்கள் முதன் முறையாகக் கண்டியைக் கைப்பற்றப் படையெடுத்தபோது பண்டாரவன்னியனின் படைகள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றத் தடையாக இருந்ததாக ஆட்சிக் குறிப்புகள் சிலவற்றில் எழுதிவைத்துள்ளனர்.
1780ல் டச்சுக்காரர் எனப்படுகின்ற ஒல்லாந்தர் உள்நுளைகின்ற வரை எந்த ஏகாதிபத்தியத்திற்கும் அடிபணியாது தனிப்பெரும் இராட்சியமாகவே வன்னிநிலம் இருந்துள்ளது. யாழ்ப்பாண இராசதானியை பிரதான இராசதானியாகக் கொண்டு கோட்டையில் ஆட்சி நடத்திய ஒல்லாந்தர்கள் தமக்குக் கீழ் வன்னியை அடி பணிய வைக்க எடுத்த வேறு சில முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போக, அவர்கள் திறை செலுத்த வேண்டும் என்பதற்காக வேறு குறுநில பாளையக்காரர்களையும் தனித்தனியாக தனது ஆளுமைக்குள் கொண்டுவர முயற்சித்தனர். பனங்காமத்தை ஆண்ட கயிலைவன்னியன் உட்பட பல்வேறு வன்னி நிலமன்னர்களும் எப்பொழுதுமே ஒல்லாந்தருக்கு திறைகொடுக்க மறுத்தவர்களாகவும், திறைகொடுப்பதாக ஒப்புக்கொண்டு பின்பு செய்யாமல் விட்டவர்களாகவும், மிகப்பெரும் தொல்லை கொடுப்பவர்களாகவும் ஒல்லாந்தர்களுக்கு அவர்கள் விளங்கினர். ஒல்லாந்தர்கள் வன்னிநிலம் மீது படையெடுக்க மிகத் தயங்கினர் என்பது உண்மையாகும். ஒல்லாந்தர்கள் பல போர்களை சந்தித்திருக்கின்றனர் என்ற போதிலும் எங்குமே இது போன்ற ஒரு வீரத்தைக் கண்டதில்லை என்பது 1782ல் ஒல்லாந்தர் வன்னியைக் கைப்பற்ற நிகழ்த்திய போர் பற்றி “லூயிஸ்” என்ற ஆசிரியர் எழுதி வைத்த ஆவணம் தெளிவுபடுத்துகிறது.
வன்னி இராட்சியம் ஒல்லாந்தர் கையில் விழுந்த பின்பும் காடுகளுக்குள் பதுங்கியிருந்து கொரில்லாத் தாக்குதல்களை நிகழ்த்தி, “இலங்கை முழுவதுமே வீழ்ந்தாலும் நான் வீழ்ந்துவிடவில்லை” என்று அந்நியருக்கு புரியவைத்தவர் பண்டாரவன்னியன். காடுகளுக்குள்ளே இருந்து தன் பலத்தைப் பெருக்கி ஆங்கிலேயர் முல்லைத்தீவில் பீரங்கிகள் புடைசூழ வைத்திருந்த பெரும் கோட்டையை தகர்த்தெறிந்த போது இலங்கையை ஆண்ட ஆங்கிலேயரின் ஒட்டுமொத்த பார்வையும் பண்டாரவன்னியன் மீது பாய்ந்திருக்க வேண்டும். சிதைந்த தன் அணிகளை ஒன்றாக்கி முல்லைத்தீவிலிருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயம் வரை (2000)இரண்டாயிரம் சதுர மையில் பரப்பில் எல்லை அமைத்து மீண்டும் வாள்கொடி பறக்கச் செய்தவர் மாவீரன் பண்டாரவன்னியன். தம்பி கயிலைவன்னியனை அமைச்சராகவும், பெரியமெய்யனாரை படைத்தளபதியாகவும் கொண்டு மீண்டும் வளர்ந்துவந்த வன்னி இராட்சியத்தோடு கரிக்கட்டு மூலையில் கூட்டை அமைத்து அந்நியனோடு அண்டிப்பிழைத்து காக்கை வன்னியன் உருவில் பகையும் சேர்ந்தே வளர்ந்தது. பண்டாரவன்னியனின் தங்கை நல்லாச்சாள் மீது காதல் கொண்டு அந்த காதல் கைகூடாமல்போக அதற்குப் பழிவாங்கும் அமையம் பார்த்திருந்தவனுக்கு ஆங்கிலேயரின் நட்பு அமையம் அமைத்துக் கொடுத்தது. வஞ்சகத்தால் அன்று பண்டார வன்னியனை வீழ்த்த முடியாது என்ற எண்ணத்தோடு திருந்தியவனாக வேடமுற்று வந்த காக்கைவன்னியனை மன்னிக்கும் மாண்பு காட்டி ஏமாந்தார் மாவீரர் பண்டாரவன்னியன். பீரங்கிகளையும் வாள்படையால் தகர்த்தெறிந்த தமிழ்வீரர் துரோகத்தால் மாளவேண்டுமென்றிருந்தது விதி. தகுந்த தருணம் ஒன்றை உருவாக்கி தனியாக பண்டாரவன்னியனை ஒட்டிசுட்டானுக்கு அழைத்துவந்து வெள்ளையர்களிடம் அகப்பட வைத்தான் காக்கை வன்னியன். இறுதிமூச்சுவரை அடிபணிய மறுத்து போரிட்டு உயிர் துறந்த அந்த வீரத்தின் தூய்மை கொல்ல வந்த ஆங்கிலேயரையும் போற்றித் துதிக்க வைத்தது. நடுகல்லும் சிலையும் தானே அமைத்து வீரத்திற்கு வணக்கம் செலுத்தினான் கொல்லவந்தவன்.
பண்டாரவன்னியனின் வாழ்க்கை எம் கண்முன்னே வெகு சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருந்தும் கூட அவற்றை மிகத் துல்லியமாக மிகச்சரியாக ஆவணப்படுத்துவதில் நாம் முழுமை பெறவில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாவீரன் பண்டாரவன்னியனின் வரலாற்றை முதன் முதலாக 1970 ஆம் ஆண்டு எழுத்தாளர் முல்லைமணி அவர்கள் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மக்கள் மனதில் பதியும்படி நாடகமாகத் தொகுத்து வழங்கினார். முல்லைமணி எழுதிய நாடகத்தொகுப்பைக் கொண்டு இந்தியாவில் கருணாநிதி அவர்கள் மாவீரன் பண்டாரவன்னியன் என்னும் தலைப்பிட்டு ஒரு காப்பியத்தை இயற்றினார். அந்தக் காப்பியம் தென்னிந்திய வாழ்க்கை முறையோடு சற்றுத் தொடர்புபடுத்தப்பட்டதாகக் காணப்பட்டது. அவற்றை எல்லாம் தாண்டிய பல உண்மைகளை பண்டார வன்னியனின் எச்சங்கள் மூலம் காணமுடியும். இன்று உள்ள சூழலில், இன்றைய தலைமுறைக்கு பூரண தேடுதல்களைச் செய்கின்ற வசதியை ஏற்படுத்திக் கொடுத்தால் நிச்சயம் இந்த வீரம் செறிந்த வரலாறு ஆவணப்படுத்தப்பட ம்.
1803 இல் ஒக்டோபர் 31 கப்டன் “ஹென்றிபேக்” கற்சிலைமடுவில் பண்டாவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாக சொல்லும் நடுகல்லும் தற்போதைய இலங்கைப் படையினரால் உடைக்கப்பட்ட நிலையில் இன்றும் ஒட்டிசுட்டானில் காணப்படுகிறது. 1803 ல் தோற்கடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பண்டாரவன்னியன் அதற்குப் பிறகும் சிலபோர்களை நடத்தி 1811ல் வீரமரணமடைந்தான் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் இன்றும் உலாவுகின்றன.
மேதகு திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் கூட தனது போராட்ட அடையாளமாய் இலங்கை முழுவதையும் ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை நிறுத்தவில்லை. பின்னாளில் வெள்ளைக்காரர்கள் ஆட்சியை எதிர்த்துப் போரிட்டு இன்று போலவே அன்றும் தூரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு வீரமரணம் தழுவிய வன்னிநில மன்னன் பண்டாரவன்னியனைத்தான் தனது போராட்டத்தின் அடையாளமாக குறிப்பிட்டார். இன்றும் பண்டாரவன்னியனின் அடையாளங்கள் சிதைக்கப்பட அதுதான் முக்கிய கரணியம். போர்வாளைத் தனது கொடியின் சின்னமாகக்கொண்டு, புலியெனப்பாய்ந்து களம்பல கண்ட பண்டாரவன்னியனின் உருவம் பற்றி கூறவேண்டுமானால் “உயர்ந்ததோற்றம்! விரிந்தமார்பு! பரந்தநெற்றி! உரமேறியதோள்கள்! கூரியபார்வை!” இவ்வாறு முத்தாரமாக கோர்த்து சொல்லமுடியும். பிறப்பு, வாழ்க்கை, வீரமரணம் என அனைத்திலும் அவிழாத பலத்த முடிச்சுகளைக் கொண்டது மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம் செறிந்த வாழ்வு.
Bolona திலீபன் தமிழ்ச்சோலை