தமிழர்களை ஏமாற்றிய முதல் உடன்படிக்கை (1918)
இலங்கை தேசிய காங்கிரஸ் தொடங்கப்படுவதற்கு முன்னரேயே 1918இல், தமிழ்-சிங்களத்தலைவர்கள் ஓர் உடன் படிக்கையைச் செய்திருந்தனர். சட்ட சபையில் தமிழர் பிரதிநிதித்துவத்தின் விகிதாசாரம் குறையாமற் காக்கப்படும் என்றும், மேல் மாகாணத்தில் ஒரு தமிழ்ப்பிரதிநிதித்துவம் வழங்கப்படவும் தாம் தொழிற்படுவோம் என்றும் இலங்கைத் தேசியசங்கத்தின் சார்பில் ஜேம்ஸ் பீரிசும், இரங்கைச் சீர்திருத்தக் கழகத்தின் சார்பில் ஈ.ஜே.சமரவிக்கிரமாவும் தமிழர் தரப்பைப் (யாழ்ப்பாணச் சங்கத்தை) பிரிநிதித்துவப் படுத்தியிருந்த சேர். பொன். அருணாச்சலத்திற்கு எழுத்து மூல உறுதியை வழங்கியிருந்தனர். ஆனால், 1921 இல் தமிழ்ப பிரதிநிதித்துவம் தலைகீழ் வீழ்ச்சியைக் கண்ட போது, அதனைக் கண்டும் காணதவராகி, தமது வாக்குறுதியைச் சிங்களத் தலைவர்கள் காற்றிலே பறக்கவிட்டனர். தேர்தலிலும் மேல்மாகாணத்தில் சிங்கள வேட்பாளரையே நிறுத்தினர்.
இதனாற்றான் சேர். பொன். அருசாச்சலம் 1922 இல், இலங்கைத் தேசிய காங்கிரசிலிருந்து விலகி தமிழர் மகாசபையை அழைத்துக் கொண்டார். தமிழர் நலன்களைப் பாதுகாக்க, தமக்கென ஒரு சபையை நிறுவவேண்டிய தேவையை உணர்ந்ததன் விளைவே இது.
கண்டிச் சிங்களவர்கள்கூட கரையோரச்சிங்களவர் தம்மைக் காட்டி கொடுத்து விட்டதாகவே கருதினர். மானிங் சீர்திருத்தத்தின்படி தங்களது பிரிநித்துவம் கரைந்த போனதால், அவர்களும் தேசிய காங்கிரசிலிருந்து விலகினர். கண்டி மாகாணங்களும் உள்ளூர் ஆளுகையுடன் கூடிய தனியான சுயாட்சியைக் கண்டிச் சிங்களவர் கோரினர்.
இந்நிலையில் அவர்களோடு ஒத்துழைத்து அவ்வகைக் கோரிக்கையை எழுப்பாத வரலாற்றுத்தவறை தமிழ்த் தலைவர்கள் அன்று செய்தது வருத்தத்துக்குரிய உண்மையாகும். தமிழர்களும் கண்டிச் சிங்களவர்களும் விலகியபின் இலங்கைத்தேசிய காங்கிரஸ் கரையோரச் சிங்களவர்களின் நலன்பேணும் கரையோரச் சிங்கள மகாசபையாகவே இயங்கியது.
1924 இல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டு, 1931 டொணமூர் அரசியல் சட்டம் இயற்றப்பட்ட காலம் வரை, மானிங் டிவன்ஸயர் அரசியற் சீர்திருத்தம் உயிரோடு இருந்தது. தமிழர்கள் சிங்களதலைவர்களால் ஏமாற்றப்படுகின்ற 2ஆவது நிகழ்வு இக்காலத்திலேதான் அரங்கேறியது