தமிழர் தேசத்தின் அரசியல் ஆழுமை பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன்
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் சாவகச்சேரியில் பிறந்து சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கல்வி பயின்றார். தமிழ் மீதும், தமிழ்மக்கள் மீதான அடக்குமுறைகளைக்கண்டு கிளர்ந்தெழுந்து தமிழீழ உரிமைப் போராட்டத்திற்காக தன்னை 1984ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக் கொண்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் 4ஆவது பயிற்சிமுகாமில் பயிற்சியைப்பெற்று தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் தனிப்பட்ட இணைப்பாளராகப் பணியாற்றினார். 1986ம் ஆண்டு தமிழகத்திலிருந்து ஈழம் வந்து களநிலைமைகளை அறிந்து மீளவும் தமிழகத்திற்குச் சென்று தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களுடன் தாயகத்திற்குத் திரும்பினார். இக்காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தினேஸ் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
தமிழகத்திலிருந்து திரும்பிய அவர் 1987மே மாதம் யாழ். தென்மராட்சி கோட்டைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 1987-1989 வரை யாழ் தென்மராட்சிப் பகுதியில் இந்திய இராணுவத்திற்கு எதிரான நேரடித் தாக்குதல்களில் சு.ப.தமிழ்ச்செல்வனின் பங்களிப்பு மிக முக்கியமானது. 1991இல் யாழ் மாவட்ட சிறப்புத்தளபதியாகச் செயற்பட்டார். 1991 இல் இடம்பெற்ற ஆகாய கடல் சமரின் (ஆனையிறவு இலங்கை இராணுவ முகாம் வலிந்த தாக்குதல்) போது நெஞ்சினில் காயமடைந்தார்.
தொடர்ந்து 1992இல் இலங்கைப் படையினரின் “பலவேகய-02” எதிர்ச்சமரிலும் பங்கேற்றார். எதிரியுடனான தச்சன்காடு சிறிலங்காப் படைமுகாம் மீதான தாக்குதலிலும், காரைநகரில் சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலிலும் பங்கேற்றார். 1991இல் இடம்பெற்ற மன்னார் சிலாபத்துறைப்படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதியாகச் செயற்பட்டார்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் 1993 இல் பூநகரி இராணுவப் படைத்தளம் மீதான “தவளைப்பாய்ச்சல்” நடவடிக்கையின் போது சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் காலில் விழுப்புண் அடைந்ததைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற் துறைப்பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். “ஓயாத அலைகள் 03” நடவடிக்கையின்போது தென்மராட்சி தனங்கிளப்பு இராணுவப் படைத்தளம் அழிப்பு உள்ளிட்ட தென்மராட்சிப் பகுதி மீட்புப் தாக்குதலில் கட்டளைத்தளபதியாகவும் பங்காற்றினார். அதேவேளை தன்னுடைய அரசியல்பணி மூலம் மக்கள் மனதில் அதிகம் நிறைந்தவராக சு.ப. தமிழ்ச்செல்வன் விளங்கினார்.
1994 முதல் 1995ஆம் ஆண்டு வரை சந்திரிக்கா அரசுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அணிக்குத் தலைமையேற்றுச் செயற்பட்டார். 2002ஆம் ஆண்டு நோர்வே அரசின் அனுசரணையுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் தலைமையின் கீழ் இணைந்து செயற்பட்டார். தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவுக்குப் பின்னர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களே பேச்சுவார்த்தை அணிக்குத் தலைமையேற்றுச் செயற்பட்டார்.
தத்துவஞானியுடன் பெற்ற அனுபவப்பகிர்வும் தான்கற்றறிந்த உலகியல், வாழ்வியல் நடைமுறை அறிவியலைக் கொண்டும் தமிழீழ தேசத்தின் விடுதலைப் பணியை நேர்த்தியாகச் செய்து கொண்டிருந்தவர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள்.
அமைதிப் பேச்சுக்களில் வெளிநாடுகளின் முதன்மைப் பிரதிநிதிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டு சிங்கள அரசின் அமைதிப் பேச்சுக்களின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியவர். தாயகத்திலும், புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அன்பையும் மதிப்பையும் பெற்றவராக விளங்கினார். மேலும் பன்னாட்டு இராஜதந்திரிகள் மத்தியில் பெருமதிப்பைப் பெற்றிருந்தவர் சு.ப தமிழ்ச்செல்வன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
தன்னோடும், தன் மண்ணோடும், தான்நேசித்த தலைவனோடும் இரவும், பகலும் உரையாடிக்கொண்டிருந்த புன்னகை அரசன் தன் மக்களுக்காக இறுதியாகக் கூறிய உரையில்! «தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும், கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் போராட வேண்டியவர்களாக இருக்கின்றோம் » என மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
ஆண்டாண்டு காலமாய் அடிமைப்பட்டுக்கிடந்த தேசிய இனத்தின் விடுதலைக்காகப் பயணப்பட்ட பெருவீரன் 2007 கார்த்திகை 2ம்நாள் காலை ஆறு மணியளவில் கிளிநொச்சியில் இலங்கை வான்படையின் குண்டுவீச்சுத்தாக்குதலில் வீரகாவியமானார். அவருடன்இணைந்து லெப்.கேணல் அலெக்ஸ், மேஜர் மிகுதன், மேஜர் செல்வம், மேஜர் நேதாஜி, லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன் ஆகிய ஐந்து விடுதலைப் புலிகளும் வீரமரணம் அடைந்தார்கள்.
23 வருடங்கள் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும், தமிழ் மக்களுக்காகவும் அவர் செய்த தியாகத்தை மதிப்பளித்து தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் 2007ஆம் ஆண்டு “பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன்” எனக் கௌரவிக்கப்பட்டார். வீரச்சாவு வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராகப் பணியாற்றினார். தமிழீழ தேசியத்தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றி கூறுகையில் «நான் அவனை எனது தம்பியாக நினைத்துவளர்த்தேன். தான் நேசித்த மக்கள் சுதந்திரமாக, கௌரவமாக, பாதுகாப்பாக வாழவேண்டும் என்று சதாசிந்தித்தான். தான்நேசித்த மக்களது விடுதலைக்காக, விடிவிற்காகத் தன்னையே ஊனாக உருக்கி உறுதியாக உழைத்த ஒரு இலட்சிய நெருப்பு அவன்» என்றார்.
அதேவேளையில் தமிழீழக் காவல்துறைப் பொறுப்பாளராக இருந்த திரு. நடேசன் அவர்கள் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வன் அவர்கள் பற்றிக் கூறுகையில் «தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பேச்சுவார்த்தை மேசையில் எடுத்துரைத்து எதிர்த்தரப்பு எதிர்க்கருத்து முன் வைக்கமுடியாத அளவில் தமிழ்மக்களின் நியாயத்தை ஆதாரத்துடன் எடுத்துரைக்கும் ஆற்றல், எதிர்த்தரப்பை தடுமாறவைக்கும் அளவிற்கு மதிநுட்பம் உடையவர்» என்றார்.
விடுதலைத் தீயை நெஞ்சில் சுமந்து கழமாடி ஆயிரம், ஆயிரம் வீரர்கள் விதையான மண்ணில் இருந்து ஓயாது உழைத்துக் கொண்டிருந்த நித்திய புன்னகை அழகன் தணியாத தாகத்துடன் இன்றும் நீழ்துயில் கொள்கின்றான்.