தமிழர்களை ஏமாற்றிய இரண்டாவது உடன்படிக்கை (1925)
1925 யூன்28 இல், யாழ்ப்பாணத்தில் சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமியின் வீட்டில் (வீட்டின் பெயர் மகேந்திரகிரி) வட்டமேசை மாநாடு ஒன்று நிகழ்ந்தது. தமிழர் மகாசபைக்கும் இலங்கைத்தேசிய காங்கிரசிற்கும் இடையே சிங்கள, தமிழ் உடன்படிக்கை என்னும் உடன்படிக்கையும் கைச்சாத்திடப்பட்டது. இவ் உடன்படிக்கையே மகேந்திரகிரி உடன்படிக்கை எனப்படுகிறது.
- வடக்கு கிழக்குப் பிரதேசத்தில் முழுமையாகவும்,மேல்மாகாணத்தில் சிங்களவர்களுக்கு வழங்கப்படும் உறுப்புரிமையின் 2/3 பங்கும் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
- இலங்கைத்தேசிய காங்கிரஸ் முன்வைக்கும் அனைத்து யோசனைகளையும் பரிசீலிக்க ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த உடன்படிக்கை நடைமுறைபடுத்தப்படவே இல்லை. இலங்கைத்தேசிய காங்கிரஸ் உடன்படிக்கையைச் செயற்படுத்த முன்வராது காலம் கடத்தியதைக் கண்டித்து, இலங்கைத்தேசிய காங்கிரஸ் குழுவிற்குத் தலைமைதாங்கி யாழ்ப்பாணம் வந்து உடன்படிக்கை செய்து கொண்ட சீ.ஈ. கொரியாவின் தம்பி, விக்ரர் கொரியா காலியில் நடைபெற்ற இலங்கைத்தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கடுமையாகச் சாடிப் பேசினார்.
“தேசிய காங்கிரஸ் தலைவர்களை நம்பமுடியாது. சிங்களத்தலைவர்களின் சொல் செல்லாக்காசு போன்றது என்று தமிழர்கள் கருதுகிறார்கள். அதன் கருத்தை வலியுறுத்துவதுபோல நடக்கப்போகிறீர்களா?” என்று இலங்கைத் தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கேள்வி எழுப்பினர்.
மானிங் சீர்திருத்ததில் இலங்கைத்தமிழர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவே இல்லை. சிங்களப் பிரதிநிதித்துவத்தின் 2/3 பங்காவது தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சிங்களத்தலைமையின் பேரினவாதப் போக்கினால் கருகிப் போயிற்று. இலங்கைத்தேசிய காங்கிரஸ் கரையோரச் சிங்களவர் காங்கிரஸ் என்பதை மெய்ப்பித்தது.