வீரவேங்கைகள் உறங்கும் புண்ணிய பூமி
தாயகத்தில் எமது வீரவேங்கைகள் விதைக்கப்பட்டு கண்ணுறங்கும் புண்ணிய பூமி “மாவீரர் துயிலும் இல்லம்”. இவ் உறைவிடத்தின் தோற்றம் மற்றும் முக்கியத்துவத்தையும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எமக்கு உள்ளது.
விடுதலைப்போரின் அரம்பக்காலப்பகுதியில், துயிலும் இல்லங்கள் இல்லாத நிலையில், எமது வீரர்களின் வித்துடல்கள் பொது மயானங்களுக்குள்ளும் காடுகளுக்குள்ளும் புதைக்கப்பட்டு வந்தன. போர் நடந்த இடத்திலேயே வீரச்சாவடைகின்ற மாவீரர்களின் வித்துடல்களை புதைக்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. இதனை மாற்றியமைத்து எமது வீரவேங்கைகளுக்கு தகுந்த உறைவிடம் கட்டியெழுப்ப விடுதலைப் புலிகள் முடிவெடுத்தார்கள். தேசியத் தலைவரின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்து ஒரு பிரபல வரைபட கலைஞர் மாவீரர் துயிலும் இல்லங்களை வரைந்தார். இதனையடுத்து இவற்றின் கட்டுமானப் பணிகள் மக்கள் உதவியோடு 1990-1991 காலப்பகுதியில் ஆரம்பமாகின. இவ்வாறு முதலாவது துயிலும் இல்லம் கோப்பாயில் அமைக்கப்பட்டது.
போர் நடந்த இடங்களில் புதைக்கப்பட்ட வித்துடல்களை பின்னர் அகழ்ந்தெடுத்து புதிய மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. எமது மாவீரச் செல்வங்களுக்கான கோயில்கள் தமிழீழத் தேசமெங்கும் அமைக்கப்பட்டன. யாழ்ப்பாணம், அம்பாறை, வவுனியா, திருகோணமலை, மணலாறு, மன்னார், மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மொத்தமாக 33 மாவீரர் துயிலும் இல்லங்கள் கட்டியமைக்கப்பட்டன.
தேசிய விடுதலைப் போரில் களமாடி 27 நவம்பர் 1982 அன்று வீரச்சாவடைந்த முதல் மாவீரன் லெப் சங்கர் அவர்களின் நினைவாகவே அனைத்து மாவீரர்களும் நவம்பர் 27 நினைவுகூரப்படுகின்றன. ஆண்டுதோறும் தமிழீழத் தேசிய மாவீரர் நாளானது, துயிலும் இல்லங்கள் முழுவதும் சிவப்பு மஞ்சள் நிற கொடிகள் கட்டப்பட்டு, ஒவ்வொரு கல்லறைக்கும் நடுகல்லுக்கும் முன்னால் பெற்றோர் உறவினர்களால் சுடர் ஏற்றப்பட்டு, மிக உணர்வுபூர்வமாகவும் எழுச்சிப்பூர்வமாகவும் நினைவுகூரப்பட்டு வந்தது. ஆனால் இன்று எமது கண்மணிகள் உறங்கும் அக் கோயில்கள் சிங்களக் காடையர்களால் ஈவு இரக்கம் இன்றி தரைமட்டமாக்கப்பட்டதே நெஞ்சைப் பிளக்கும் உண்மையாகும். தமிழ்ர்களுக்கென்ற ஒரு தனித் தமிழீழம் உருவாக்கி அதில் தமிழர்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்காக களமாடி மாண்ட மாவீரர்களின் நினைவாலயங்களை இல்லாதொழித்து தமிழினத்தின் இருப்பை இன்னும் சிதைக்கிறான் சிங்கள வெறியன்.
மாவீரர்களை நினைவுகூர்வதற்கான தடையை விதித்துள்ளனர் சிங்கள நீதிமன்றங்கள். ஆனால் எமக்காக வாழ்ந்து, போராடி வித்தான எமது மாவீரர்களை நினைவுகூருவது எமது உரிமையும் கடமையுமாகும். தாயகத்தில் மாவீரர் நாளை முன்னிட்டு மேற்கொண்டு வரும் அனைத்து வேலைகளையும் தடுத்து நிறுத்தி இவ் உரிமையை சிங்களப் பேரினவாத அரசு இன்று வரை எமக்கு மறுக்க நினைத்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுத்து தமிழர்களின் உரிமையையும் அடையாளத்தையும் நிலைநாட்டுவதே எமது கடமையாகும்.
“எங்கே எங்கே ஒரு தரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒரு தரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்” என்ற உணர்வுபூர்வமான பாடல் வரிகள் ஒலித்தவாறு, நெஞ்சில் சுமந்த வலிகளுடனும் எமது மாவீரச் செல்வங்கள் விட்டுச் சென்ற நினைவுகளுடனும் நாம் அனைவரும் ஒவ்வொரு வருடமும் மிக சிறப்பாக மாவீரர் நாளை நினைவுகூருவோம். ஆனால் இந்த வருடம் கொரோனாவைரசு காரணமாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடி மாவீரர்களை நினைவுகூர முடியாத இக்கட்டான சூழ்நிலை உள்ளதால், நாம் அனைவரும் எமது மாவீரர்களை நெஞ்சில் சுமந்து எமது இல்லங்களில் இருந்தே அவர்களுக்கான அஞ்சலியையும் வீரவணக்கத்தையும் செலுத்துவோம். அவர்களுடைய வீர வரலாற்றை உலகெங்கும் ஒலிக்கவைப்போம்!
எமது மாவீரர்கள் மகத்தான இலட்சியவாதிகள். தேசிய விடுதலை என்கின்ற உயரிய இலட்சியத்திற்காக வாழ்ந்து அந்த இலட்சியத்திற்காகத் தமது வாழ்வைத் தியாகம் செய்தவர்கள். இதனால்தான் இவர்கள் சாதாரண மனிதர்களிலிருந்து வேறுபட்டுநிற்கிறார்கள், உயர்ந்துநிற்கிறார்கள். எமது தேசத்தின் வரலாற்றில் சங்கமமாகி நிற்கிறார்கள்!
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்