ஏன் இத்தாலியில் இவ்வளவு உயிரிழப்புக்கள்?
சிவில் பாதுகாப்பு துறையினரால் வெளியிட்ட புள்ளிவிபரங்கள்படி இத்தாலி நாட்டில்தான் அதி கூடிய நபர்கள் கொரோனா வைரசால் இறந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
பல மாதங்களுக்கு முன்பே வைரசின் பாதிப்புக்கு உள்ளாகிய மற்றும் 20 மடங்கு சனத்தொகையைக் கொண்ட சீனாவை விட இத்தாலியின் இழப்புக்கள் அதிகமாக இருப்பது உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இத்தாலிக்கு ஏன் இந்த அதிக்கூடிய வீதாச்சாரம் என்பதை பல ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஊடகங்கள் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள்.
முதியோர்களின் எண்ணிக்கை.
2017 ஐநாவின் (ONU) புள்ளிவிபரங்கள் அடிப்படையில் இத்தாலி மக்கள் தொகையின் 29,4 வீதம் 60 வயதிற்கு மேற்பட்டோர். உலகளவில் இந்த வகைப்பாடுகளில் ஜப்பானுக்கு அடுத்ததாக இத்தாலி தான் இருக்கிறது. மேலும் நீண்ட ஆயுள் எதிர்பார்ப்பு பட்டிகளிலும் இத்தாலி முதன்மையான இடங்களில் காணப்படுகிறது.
இத்தாலி மருத்துவ துறையால் பெருமையாக பார்க்கப்பட்ட அந்த எண்ணிக்கை இன்று வைரசின் தாக்கத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.
கொரோனா வைரசு அனைவரையும் தாக்கினாலும் 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு அதிகூடிய பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது என்பது தெரிந்த விடயம். மற்றும் வெவ்வேறு நோய்களால் பலவீனமாக இருப்பவர்களுக்கு வைரசின் தாக்குதலில் இருந்து சிகிச்சை பெறுவது மிகக் கடினமாக உள்ளது.
சனத்தொகையின் மூன்றில் ஒரு பங்கு 60 வயதிற்கு மேற்பட்டோர்களைக் கொண்ட காரணத்தாலையே இத்தாலி நாட்டிற்கு இந்த வைரசின் தாக்கம் அதிகூடிய பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
புள்ளிவிபரங்கள் எடுக்கும் முறை.
நாம் எல்லோரும் கவனத்தில் எடுக்க வேண்டிய விடயம் இந்த புள்ளிவிபரங்கள் எவ்வாறாக எடுக்கப்படுகிறன என்பதுதான்.
உயிரிழந்தவர் கொரோனாவைரசு தொற்றுநோயிற்கான பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால் சிவில் பாதுகாப்பு துறையின் எண்ணிக்கையில் இணைக்கப்படுவார்.
இந்த எண்ணிக்கையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் கொரோனா வைரசால் தான் இறந்தவர்கள் என்று உறுதி செய்யப்படவில்லை.
பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் வேறு நோய்களால் பலவீனமாக இருந்து இறந்தவர்களும் இந்த எண்ணிக்கையில் இணைக்கப்படுகிறார்கள்.
ஐரோப்பாவில் இருக்கும் வேறு நாடுகள் வெவ்வேறு அளவுக்கோல்களை பயன்படுத்துகிறார்கள். இந்த விடயத்தை மருத்துவ வல்லுநர் Roberto Bernabei பாதுகாப்பு துறையின் பத்திரிகை சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த கடுமையான வீதத்தின் இன்னொரு காரணம் சரியான புள்ளிவிபரங்கள் எடுக்காததும் தான். இத்தாலி சனத்தொகையை விட 51 மில்லியன் குறைவாக இருந்தாலும் தென் கொரியா (Corea del Sud) இரண்டு மடங்கு பரிசோதனைகளை செய்து இருக்கிறது.
குறைவான பரிசோதனைகள் செய்வதால் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களை இனம் காணுவது கடினம். மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கு வருகிற நபர்களை அல்லது அறிகுறிகளை காட்டும் நபர்களை மட்டும் பரிசோதிப்பதால் ஒரு சிறிய மக்கள் தொகையின் எண்ணிக்கை தான் இந்த புள்ளிவிபரங்களில் பார்க்கப் படுகிறது.
மருத்துவமனைகளின் கொள்ளளவு.
அரசாங்க தரப்பினரால் மறுக்கப்பட்டாலும் இந்த உயிரிழப்புகளுக்கு இன்னும் ஒரு காரணமாக குற்றம் சொல்லப்படுகிறது
கடைசி வருடங்களில் பொது சுகாதாரத்துறைக்கு குறைக்கப்பட்ட நிதி வளங்கள் மற்றும் இந்த துறையில் தனியார் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவமே ஆவன. இக் காரணமாக மருத்துவமனைகளின் கொள்ளளவை குறைத்து இருக்கிறது என்று குற்றம் முன்வைக்கப் படுகிறது.
உறுதியாக ஒன்று சொல்லலாம். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் இந்த கொரோனாவைரசு மிக ஆபத்தான நோய் ஆகும். உச்சக் கட்டத்தை நோக்கி போகின்ற தருணத்தில் அனைவரும் அரசாங்கத்தின் நெறிமுறைகளை மதித்து நடந்துகொள்ளவேண்டும்.