கண்ணீர் வணக்கம் மனிதநேயப் பணியாளர் பசிலியார் வின்சன் ஜோசப் (றிச்சேட்)
கண்ணீர் வணக்கம்
மனிதநேயப் பணியாளர்
பசிலியார் வின்சன் ஜோசப் (றிச்சேட்)
மண்டைதீவு
14/03/2021 போலோனிய நகரில் சாவடைந்தார்
தமிழீழ தேசத்தின் மீது ஆழ்ந்த பற்றால் தன் தேசத்து மக்கள் அல்லலுறும் வேளையில் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் அக்கறையுடன் நீண்ட காலமாகப் பணியாற்றிய பசிலியார் ரிச்சேட் அவர்களின் மறைவு எம்மையும் ஆறாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழ தேசத்தில் பிறந்து எண்பதுகளின் இறுதி பகுதியில் இத்தாலி நாட்டிற்கு புலம் பெயர்ந்த இவர் மிகக் குறுகிய காலத்திலேயே தமிழீழத்தேசியப்பணியில் தன்னை இணைத்துக் கொண்டார். தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முனைப்பு பெற்ற அக்காலத்தில் தொடர்ச்சியாக மக்கள் இடம்பெயர்ந்து வாழும் நிலை ஏற்பட்டசூழலில் எம் தேசியத்தலைமையினால் உருவாக்கப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக்கழகப் பணிகள் புலம்பெயர்ந்த நாடுகளில் எல்லாம் முடுக்கிவிடப்பட்டிருந்தன. அக்காலத்தில் தான் வாழ்ந்த பலேர்மோ நகரில் ஆணிவேராக இருந்து புனர்வாழ்வுக்கழகப்பணிக்காக தன்னை அர்ப்பணித்து பணியாற்றிய ஓர் அற்புதமான மனிதர். காலநிலையை பொருட்படுத்தாமல் வாராவாரம் கால்நடையாக தானும் நடந்து சிற்றுண்டிகளையும் சுமந்து அந்நகரில் பிரசித்தி பெற்ற மலைக்கோவிலுக்குச் செல்லும் தமிழ் மக்களிடம் மட்டும் அல்லாமல் இத்தாலி நாட்டு மக்களிடையேயும் தனது புன்னகையுடன் கூடிய உரையாடலால் சிறுகச் சிறுக நிதி சேர்த்து தாயக மக்களின் கண்ணீரைத் துடைக்க பெரும் பாடுபட்டவர். பின்னாளில் தனது தொழில் காரணமாக இடம்பெயர்ந்து பொலோணியா மாநகருக்கு வந்த பின்னரும் அப்பிரதேசத்தில் மட்டுமன்றி இத்தாலி மேற்பிராந்திய பிரதேசங்கள் எல்லாவற்றிலும் ஆழிப்பேரலை அவலத்தின் போதும், மற்றும் விழாக்காலங்களில் நத்தார் தாத்தாவாகவும் தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாது தொடர்ந்து புனர்வாழ்வுப்பணிகளை கைவிடாமல் தொடர்ந்தவர். இரண்டாயிரத்து ஒன்பதில் தமிழீழ தேசம் சிதைக்கப்பட்ட போது இடம் பெற்ற கவனயீர்ப்பு போராட்டங்களில் அக்காலத்தில் இத்தாலியில் காவல்துறையினரின்; கெடுபிடிகளையும் தாண்டி துணிச்சலாக பங்கெடுத்தவர். அதன் பின்னரும் பலரும் மனச்சோர்வுடன் இருந்த காலத்திலும் யுத்தம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த மக்களின் துயர்துடைக்க தாயகநலன் திட்டத்தை 2017 ஆம் ஆண்டுவரை செயற்படுத்த அரும்பாடுபட்டவர். இவ்வாறு தன் வாழ்வின் பெரும்பகுதியை தமிழர் தேச நலனை கருத்தில் கொண்டு பணியாற்றிய அவரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர்,நண்பர்கள்,உறவினர்கள் கரம்பற்றி ஆறுதல் கூறி நிற்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
இத்தாலி தமிழர் ஒருங்கினைப்புகுழு
இத்தாலி தமிழர் ஒன்றியம்