இத்தாலியில் G20 சர்வமத மாநாட்டிற்கு வருகை தந்த மகிந்த ராஜபக்ச
கடந்த நாட்களில் (12-14 செப்டம்பர் 2021) இத்தாலி, பொலோனியா நகரில் G20 சர்வமத மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் இத்தாலி அரசாங்கத்தின் பிரதமர், வெளிவிவகார அமைச்சர், மற்றும் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், அரசியல் அதிகாரிகள், அறிஞர்கள், சர்வதேச அமைப்புகள், மனிதநேய அமைப்புகள் கலந்து கொண்டார்கள். இவற்றில் சிறிலங்கா அரசாங்கத்தின் பிரதமரான மகிந்த ராஜபக்சவும் வெளிவிவகார அமைச்சர் G. L. Peirisம் அழைக்கப்பட்டு, சிறப்புரை ஆற்றி கலந்து கொண்டார்கள்.
இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு சர்வதேச சமூகத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச சமாதானம் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட இம் மாநாட்டிற்கு வருகை தந்து கலந்து கொண்டது அனைவரையும் வியப்படைய செய்தது. இதற்கு எதிராக பல விதமான கண்டனங்களும் எதிர்ப்பு போராட்டங்களும் கடந்த நாட்களில் நடைபெற்றன. ஈழத்தில் எமது தமிழ் மக்களை ஈவு இரக்கமின்றி கொத்துக் கொத்தாக கொன்று குவித்த இனப்படுகொலையாளி சர்வமத மாநாட்டிற்கு வருகை தந்தது எவ்விதத்திலும் ஏற்க முடியாதது. ஆகையால், இம் மாநாட்டை ஒழுங்கு செய்த கட்டமைப்புகளுக்கும், இத்தாலி அரசாங்கத்தின் பிரதமர் மற்றும் நதர அதிபர்களுக்கும் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிராக தமிழ் கட்டமைப்புகளால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும், சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்க்கும் முறையில் இனப்படுகொலையாளி ராஜபக்சவிற்கு எதிராக எதிர்பரப்புரை சுவரொட்டிகள் பொலோனியா நகரிலும் ஏனைய நகரங்களிலும் ஈழத்தமிழர்களால் ஒட்டப்பட்டன. “140,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதற்கு காரணமான ஒரு போர்க்குற்ற இனப்படுகொலையாளியை அமைதி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்காக எந்த தைரியத்துடன் அழைக்க முடியும்?” என்ற கண்டனத்தைக் கொண்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
2019ல் நடைபெற்ற Easter தாக்குதல் தொடர்பான விசாரணையை திசைதிருப்புவதற்காக பிரதமர் இவ் வருகையைப் பயன்படுத்தியதாக இலங்கையின் கத்தோலிக்க தேவாலய பேராயர் Malcolm Ranjith அவர்கள் செப்டம்பர் 8 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து பல சிங்கள மக்களும் மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்தாலி வாழ் தமிழர்கள் மேற்கொண்ட எதிர்ப்பரப்புரை தொடர்பாக இத்தாலிய தகவல் தளங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச குற்றங்களான இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியான முறையில் சமூக வலைத்தளங்களிலும் எமது தமிழ் இளையோர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இம் மாநாட்டிற்கு ஒரு இனப்படுகொலையாளியை அழைத்ததற்காக மத அறிவியல் அறக்கட்டளையிடமும் (Foundation of the Religious Science) விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.