புதைத்த விதைகளும் துளிர்விடும் விருட்சங்களும்
நாம் வந்தேறு குடிகளா? இல்லை! ஆண்டாண்டு காலமாக இனமான உணர்வோடும் உயர்வான பண்பாட்டுடனும் ஈழவள மண்ணில் நாம் இன்புற்று வாழ்ந்தோம். போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரின் வருகையினால் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின் சிங்கள அரசின் சதி வலையால் மொழியுரிமை, வாழ்வுரிமை, குடியுரிமை, கல்வியுரிமை ஆகிய அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டதனால் தமிழர்கள் மத்தியில் விடுதலை உணர்வு தோன்றியது.
எமது உரிமைக்காக விடுதலை உணர்வோடும் சுயநிர்ணயத்தோடும் தங்கள் உயிர்களை ஈகம் செய்தவர்கள் தான் நம் மாவீரர்கள். தரைப்படை, கடற்படை, வான்படை என்ற முப்படைகளையும் உருவாக்கியது மட்டுமல்லாது கந்தகக் காற்றினை சுவாசித்த மறவர்களைக் கொண்ட கரும்புலிப்படையையும் உருவாக்கி வீர வரலாறு படைத்த தீரர்கள்.
மண் மீட்பின் மாண்புமிகு வீரர்களே! மனிதப் பிறவியின் வித்தான முத்துக்களே! தன்னிகரற்ற தலைவரின் தளராத தன்னம்பிக்கையும் தன்மான உணர்ச்சியும் இணையில்லா எம் தாய் நிலத்திலோ புலம்பெயர் புகலிடத்திலோ தலைவர் அவர்கள் ஊட்டிய விடுதலை உணர்வு விருட்சங்களாக வளர்ந்து நிற்கும். சிங்கள இனவெறி அரசு கொடுமைகளை இழைத்தாலும் உலக நாடுகள் அரசியல், ஆயுத உதவிகளை வழங்கினாலும் தமிழர்களின் தமிழீழ தாகம் தணியாது, எம் தாயகம் யாருக்கும் பணியாது, விழ விழ எழுந்து நிற்போம்.
இன்று எமது வளங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு வருகின்றன. தமிழர்களின் வீரத்தையும், தன்மானத்தையும் என்றும் அழிக்க முடியாது! நெஞ்சினிலே விடுதலை நெருப்பை ஏந்தி களமுனையில் பகைவரை வென்று புதிய புறநானூற்றுக்காவியம் படைத்த காவிய நாயகர்களின் கனவை நனவாக்குவோம். வீரம் விதைக்கப்பட்டுள்ளது. மீண்டும் விருட்சமாகி முளைத்தெழுவோம்! உங்கள் இலட்சிய வேட்கைகள் நிச்சயம் நனவாகும். விழித்தெழுவோம்!