காலத்தால் அழியாத மண்ணின் மைந்தர்கள்
நவம்பர் 27, தமிழீழ விடுதலைப் போராட்ட காப்பியத்தில் காலத்தால் அழிக்கமுடியாத உன்னதமான தியாகத்தைப் புரிந்த எம் மாவீரர்களின் திரு நாள். எமது மண்ணின் விடிவிற்காய், எமது மக்களின் விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய வீர மறவர்களின் தியாகங்களை உலகெங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் நினைவு கூறும் நாள் இது. தலைவர் வகுத்த பாதையில் நெறி தவறாது, தன்னலமற்று தமது உயிர்களுக்கும் மேலாக எமது மண்ணின் விடுதலையே பெரிதென்று தம்மை அர்பணித்த வீர வேங்கைகளை நெஞ்சில் சுமந்து, தமிழீழம் என்ற அந்த உன்னத இலட்சியத்துக்காய் நாம் எழுச்சி கொண்டு எழும்பும் நாள் இது.
உலகமே எம் இனத்தை நிராகரித்த போது, மனிதனேயத்தின் தலைசிறந்த பண்பாகிய விடுதலையை அடைய மாவீரர்கள் தமது ஈகங்கள் மூலம் தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் படைத்தார்கள்.
விடுதலை வேள்விக்காய் தமது உயிர்களை தியாகம் செய்த 40.000 மேற்பட்ட மாவீரர்களில் முதல் வித்தாகியவர் தான் லெப். சங்கர் என அளைக்கப்படும் சத்தியநாதன். தமிழருக்கு எதிராய் வீசிய இனவெறி காற்று பலரின் சினத்தைத் தூண்டியது, அவர்களில் ஓர் இளைஞன் தான் சத்தியநாதன். 20 வயதில் மண்ணின் விடுதலைக்கான பாதையை தேர்ந்தெடுத்து, பல துரைகளில் சிறந்து விளங்கிய சத்தியநாதன், 1982இல் திருநெல்வேலியில் இடம்பெற்ற முற்றுகையில் இரண்டகர்களின் கைகளில் சிக்காமல் தப்பிக்க முயன்ற போது அவர் மீது குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார். அவரின் உடல் நிலை மோசமாகிவிட்டதால் 27.11.1982 அன்று மாலை 6.05 மணியளவில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்தார். 1989இல் எம் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் இந் நாளை தமிழீழத் தேசிய மாவீரர் நாளக அறிவித்தார்.
அன்றிலிருந்து 27 நவம்பர் அன்று ஒவ்வோறு ஆண்டு உலகெங்கும் வாழும் ஈழத் தமிழர்களும் எம் மாவீரரை நினைவு கூருவார்கள். எழுச்சி மிக்க இம் மாவீரர்களின் திரு நாள் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக நடாத்தப்படும். தலைவர் மேதகு வே. பிரபாகரன் கூறியது போல் தான் ‘’ உலகில் எந்தப் பகுதியில், எந்தச் சூழழில், எந்தத் தகுதியில் வாழ்ந்தாலும் தமிழீழத்தில் தான், அந்தத் தாயக பூமியில்தான் உங்கள் வேர் ஆழப் புதைந்து கிடக்கிறது. இந்த மண்ணில் தான் உங்கள் இனத் தனித்துவத்தின் அடையாளம் ஆழப்பதிந்து கிடக்கிறது. இந்தத் தாயக தேசம் எதிரியின் ஆதிக்கப்பிடியில் சிக்கி அழிந்து போகாது பாதுகாப்பதில் உங்களுக்கு பெரும் பங்கு உண்டு. பொறுப்பு உண்டு. கடப்பாடு உண்டு.’’ இதனால் தான் நாம் சுதந்திரமாக எமது சொந்த மண்ணில் வாழும் நிலமை வரும் வரை எந்த நாட்டில் வாழ்ந்தாலும் எமது வீர வரலாற்றை அழிய விடாது பேணிக் காத்து அடுத்த தலைமுறைக்கு எம் மாவீரர்களின் அர்ப்புதத்தையும், அர்பணிப்பையும் கடத்த வேண்டியது எமது கடமை.
இனவெறி அரசாங்கம் எமது இனத்தின் வீர மறவர்களின் வரலாற்றை வேரோடு அளிக்கும் திட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. இவ்வாறு பல அச்சுறுத்துல்களுக்கு மத்தியிலும் எமது மக்கள் எம் மாவீரர்களை நினைவுகூர ஒருபோதும் தயங்கியதில்லை, இதுவே எம் மாவீரர்களின் யாகம் எம் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தை பிடுத்திருக்கின்றன எனபதற்க்குச் சான்றாகும், அதே வழியில் புலம்பெயர் மண்ணில் வாழும் நாங்களும் எந்த ஒரு சூழ்நிலையிலும் எமது வேர்கள் எவை என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
தமிழீழமண்ணில் உறங்கிக்கொண்டிருக்கும் மாவீரர்களின் கனவு நனவாகும் வரை விடுதலை நோக்கிய இந்த இலட்சியப் பாதையில் நாம் தொடர்ந்து போராடுவோம் என இந்த மாவீரர்களின் திரு நாள் அன்று நாம் உறுதிமொழி எடுப்போம்.
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!