இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு தினம்
டிசம்பர் 9 ஐ.நா சபையால் இனப்படுகொலை குற்றத்தை தடுப்பதற்கான, மற்றும் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளாகும்.
யூத மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலை உலகத்தையே உலுப்பியது. இது போன்ற அட்டூழியங்கள் மனிதனே தனது சக மனிதர்களுக்கு எவ்வாறு விளைவித்தான் என்பது யாராலும் புரிந்து கொள்ள முடியாத எதார்த்தமாக இன்றும் இந்த நிகழ்வுகள் உள்ளன. மனித வரலாற்றில் யாரும் கண்டிரா இது போன்ற கொடுமைகள் இனியும் மனித காப்பியத்தில் நிகழக்கூடாத நோக்கத்தில், ஐக்கிய நாடுகளால் 9 டிசம்பர், 1948இல் பொதுக்குழுவில் நியமிக்கப்பட்டது தான் ‘இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை’ – The Convention on the Prevention and Punishment of the Crime of Genocide. இந்த உடன்படிக்கை 152 நாடுகளால் பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இவ் உலக நாடுகள் உலகத்தின் எந்த மூலையிலும் இனப்படுகொலை மேற்கொள்ளப்பட்டாலும் அதை தடுக்கவும், தண்டிக்க வேண்டியதும் அவர்களின் கடமையாகும்.
மனிதனே மனிதகுலத்திற்கு எதிராக விளைவித்த குற்றச் செயல்களின் உச்சக்கட்டம் தான் இனப்படுகொலை. யூத மக்களுக்கு எதிராக இடம்பெற்ற அநீதியைக் கண்ட ரபேல் லெம்கின்-Raphael Lemkin என்ற சட்டத்தரணி மனித வரலாற்றில் யாரும் கண்டிரா அநீதிகள் இடம்பெற்றுள்ளன, இந்த அநீதிகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு புதிய சொல் உருவாக்க வேண்டிய அவசியத்தை அறிந்து 1948 இல் இனப்படுகொலை என்ற சொல்லை உருவாக்கினார். ஒரு இன மக்களை வேரோடு திட்டமிட்டு அழிப்பது தான் இனப்படுகொலை எனவும், இனப்படுகொலையானது இரண்டு கட்டங்களாக இடம்பெறும்: முதலாவது கட்டமாக ஒடுக்கப்படுவோரின் தேசிய வடிவத்தினை அழிப்பதுமாகவும், இரண்டாம் கட்டமாக ஒடுக்குவோரின் தேசிய வடிவத்தை ஒடுக்கப்பட்டவர் மீது திணித்தலும் எனவும் ரபேல் லெம்கின்-Raphael Lemkin கூறியுள்ளார். பேரினவாத சித்தாந்தத்தை கடைப்பிடிக்கும் அரசாங்கங்கள், ஒடுக்கப்படுவோரின் தேசிய அடையாளங்கள், மொழி, மதம், கலாச்சாரம் மற்றும் தேசிய உணர்வுகளை அவர்களிடமிருந்து திட்டமிட்ட முறையில் பறித்து, அவர்களை அடையாளமற்ற இனமாக மாற்றிய பின்பு மேலாதிக்க அரசாங்கத்தின் அடையாளங்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கப் படும். பின்பு, இனப்படுகொலை எனும் சொல் சட்ட துறையில் நாக்ஜிக்களுக்கு எதிராக இடம்பெற்ற குற்றவியல் விசாரணையில் பயன்படுத்தப்பட்டு, பின்பு இனப்படுகொலைக்கான விளக்கத்தை ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இனப்படுகொலை என்றால்:
- அந்த இன அல்லது குழுவின் உறுப்பினர்களைக் கொல்லுதல்;
- இன உறுப்பினர்களுக்குக் கடுமையான உடல் அல்லது மனதிற்குத் தீங்கு விளைவித்தல்;
- இனத்தின் இருப்பு சார்ந்த வாழ்க்கையை அழிப்பதற்கான சூழ்நிலையைத் திட்டமிட்டு ஏற்படுத்துதல்;
- குழுவினர் அல்லது இனத்தினர் குழந்தை பெற்று கொள்வதைத் தடுக்கும் நோக்கில் நடவடிக்கைகளை எடுத்தல்;
- வலுகட்டாயமாக இனத்தின் குழந்தைகளை மற்றொரு இனத்திற்கு மாற்றுதல்.
இனப்படுகொலையைத் தடுக்க வேண்டுமாயின் அதன் மூல காரணங்களைப் புரிந்துகொள்வது அவசியமாகும். இனப்படுகொலையும் அதனுடன் தொடர்புடைய கொடூரங்களும் அடையாளத்தைக் காப்பதற்கு மோதும் பல்வேறு தேசிய இனங்கள் அல்லது இன மற்றும் மதக் குழுக்கள் உள்ள சமுதாயத்தில் இடம்பெறுகின்றன. இவ்வாறான மோதல்கள் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களால் தூண்டப்படுகின்றன.
இனப்படுகொலையானது திடீரென்று நிகழும் சம்பவம் அல்ல. ஒரு அரசாங்கத்தால் அல்லது அதன் குழுக்களால் திட்டமிட்ட முறையில் நிகழ்த்தப்படுவது தான் இனப்படுகொலை. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதைப் புரிந்து கொள்வது மற்றும் இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் அறிகுறிகுறிகளை அடையாளம் காண கற்றுக் கொள்வது இவ்வாறான கொடுமைகளைத் தவிர்ப்பதற்கு அவசியமாக திகழ்கின்றன.
முக்கியமாக, தடுப்பு நடவடிக்கைகள் Responsability to Protect எனும் சர்வதசே கோட்ப்பாட்டுக்கு அடித்தளமாக அமைகின்றன. 2005ன் உலக உச்சி மாநாட்டில் (2005 World Summit), உறுப்பு நாடுகள் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், இன அழிப்பு மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் அவற்றின் தூண்டுதலிலிருந்து தங்கள் மக்களை பாதுகாப்பதற்கு உறுதிபூண்டன. குறிப்பாக, இப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு நாடுகளுக்கு உதவி தேவைப்படும் போது, சர்வதேச சமூகம் அவர்களுக்கு உதவ தயாராக இருக்க வேண்டும் என்றும் இது போன்ற குற்றங்களில் இருந்து தங்கள் மக்களை பாதுகாக்க அரசாங்கங்கள் தவறினால், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக, சர்வதேச சமூகம் கூட்டாக செயல்பட வேண்டும் என்றும் இக் கோட்ப்பாட்டின் ஊடாக நாடுகள் உறுதி எடுத்துக் கொண்டன. இது சர்வதேச சட்டத்திலும் இனப்படுகொலை உடன்படிக்கையிலும் ஆழமாக வேரூன்றியுள்ளது.
இவ்வாறான சட்ட உத்தரவாதங்கள் இருக்கும் நிலையில் தமிழ் மக்களின் இனப்படுகொலை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு ஏன் வரவில்லை? 1948ம் ஆண்டு முதல் இன்று வரை நடந்தேறி வரும் தமிழின அழிப்புக்கு சர்வதேசம் ஏன் மௌனம் சாதிக்கின்றது?
இதன் வெளிப்பாடாக, 2012ல் ஐக்கிய நாடுகள் சபையின் உள் ஆய்வுக் குழு (Internal Review Panel) Petrie Report எனும் பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. போரின் இறுதிக்கட்டத்தில் மேற்கூறிய Responsability to Protect எனும் சர்வதசே கோட்ப்பாட்டில் தோல்வியடைந்து பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து ஐ.நா தோல்வியடைந்து விட்டது எனவும் இவ் அறிக்கை தெளிவாக கூறுகின்றது. இவ்வாறு சர்வதேசம் இழைத்து வரும் தவறுகளால் சிறிலங்கா அரசாங்கம் தனது கண்மூடித்தனமான இனவழிப்பை தமிழர்கள் மீது எல்லையின்றி தொடுத்து வருகின்றது.
மகாவம்சத்திலிருந்து ஆரம்பித்த சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான விரோதம் 1948ம் ஆண்டு முதல் வன்முறையாக மாறி இன்று வரை கொடூரமான முறையில் தொடர்ந்து தான் வருகின்றது. 1956ல் சிங்கள தனிச் சட்டம், 1971ல் தரப்படுத்தல், 1983ல் தமிழ் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இனக்கலவரத்தால் 3000த்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டு, 500க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, தமிழர்களின் உயிர், உடைமை அனைத்தையும் சூறையாடியது சிங்களப் பேரினவாதம். இப்பிடி ஆரம்பித்த தமிழர்களின் இனவழிப்பு 2009ல் உச்சத்தை எட்டியது. போரின் இறுதிக் கட்டங்களில், தமிழர்கள் பதுங்கியிருந்த இடங்களை அடையாளம் கண்டு குண்டுகள் வீசி ஆயிரக்கணக்கான தமிழ் பொது மக்களைக் கொன்று குவித்தது சிங்கள அரசு. சர்வதேசச் சட்டத்தால் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தமிழர்கள் மீது ஈவு இரக்கமின்றி பாவிக்கப்படடன. உணவு மற்றும் மருத்துவ உதவிகள் திட்டமிட்டு மட்டுப்படுத்தப்பட்டன. பாலியல் பலாத்காரம், அரசு சார்பு மருத்துவர்களால் கட்டாயக் கருக்கலைப்பு மற்றும் தமிழ் பெண்களுக்கு கருத்தடை போன்ற சொல்லொணா துன்பங்களை சிங்கள அரசாங்கம் தமிழர்களுக்கு இழைத்தது, இழைத்து வருகின்றது. இவை அனைத்துமே திட்டமிட்ட இனப்படுகொலை குற்றத்திற்குள் அடங்கும் நடவடிக்கைகள் ஆகும். ஆனால் இவற்றிற்கான பொறுப்புகளை ஏற்க மறுக்கிறது சிங்கள அரசாங்கம். பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்கக்கூடிய நம்பகமான நீதிப் பொறிமுறையோ அல்லது குற்றப் பொறுப்புகளோ சர்வதேச சமூகத்தால் நிகழ்த்தப்படவில்லை என்பதே மறுக்க முடியாத உண்மை. இந்த மௌனத்திற்கு எதிராகப் போராட வேண்டியது புலம் பெயர் மண்ணில் வாழும் தமிழர்கள் அனைவரின் கடமையாகும். இக் கடமையிலிருந்து தவறாமல் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இன்றைய நாளில் புரிந்து கொள்வதும் வரலாற்று அவசியமும் ஆகும்.