மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்-16ம் ஆண்டின் நீங்கா நினைவில்
மட்டக்களப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களின் ஒருவருமான ஜோசப் பரராஜசிங்கம் டிசம்பர் 25, 2005 அன்று மட்டக்களப்பு செயின்ற் மேரி தேவாலயத்தில் வைத்து சிறிலங்கா அரசாங்கத்தின் கூட்டுச் சதியால் தாக்கப்பட்டு சுட்டுக்கொல்லப் பட்டார்.
திரு ஜோசப் பரராஜசிங்கம் 1934 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி பிறந்து மட்டக்களப்பு செயலகத்தில் வரைவாளராக தனது பணியை ஆரம்பித்தார். “தினபதி” என்ற தமிழ் நாளிதழில் பகுதி நேரப் பத்திரிகையாளராகப் பொதுச் சேவையைத் தொடங்கிய அவர், சுகுணம் ஜோசப் என்ற அவரது மனைவியின் பெயரில் கதைகள் எழுதினார்.
பத்திரிகையாளராக பணிபுரிந்த இவர், கிழக்கு மண்மீது சிறீலங்கா அரசு முன்னெடுத்து வந்த ஆக்கிரமிப்புகளையும் மட்டக்களப்பில் மக்களின் வாழ்வையும் தன்னுடைய எழுத்துக்களின் மூலம் வெளிக்கொண்டு வந்தார்.
1990 இல் இலங்கை பாராளுமன்றத்திற்குள் நுழைந்த இவர் 1994 இல் வடகிழக்கில் ஒரு தமிழ் வேட்பாளர் பெற்ற அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒக்டோபர் 2000 தேர்தல்களில் விருப்பு வாக்குகளின் இறுதி எண்ணிக்கையில் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002ல் மீண்டும் தேசியப்பட்டியலின் கீழ் பாராளுமன்ற உறுப்பினரானார். மேலும், தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினராக இருந்த ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியிலும் அங்கம் வகித்ததுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினராகவும் செயற்பட்டவர்.
’90களின் பிற்பகுதியில் சிறிலங்கா ஆயுதப் படைகளால் மேற்கொள்ளப்பட்டு வந்த தடுப்புக்காவல், காணாமல் போனோர், சித்திரவதை, பாலியல் வன்முறை மற்றும் தமிழ் மக்கள் மீதான கொலை வழக்குகளை முழு மூச்சுடன் தொடர்ந்தார்.
இவ்வாறு தமிழ் மக்களின் உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்து உரிமைக்குரலாக திகழ்ந்த ஜோசப் பரராஜசிங்கம் அவர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவரால் மாமனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
“திரு பரராஜசிங்கம் தமிழ் தேசியத்தை அழிக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வதில் உறுதியுடன் செயல்படும் ஒரு உச்ச அரசியல் தலைவராக பணியாற்றினார். உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் அவரை ஒரு நேர்மையான தலைவராகக் கருதினர், அவரது படுகொலை நம் அனைவரைக்கும் கோபத்தையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது” என தமிழீழ அரசியற்துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்கள், இறுதிச் சடங்கில் அஞ்சலி செலுத்துவதற்காக கிளிநொச்சியில் திரண்டிருந்த மக்களிடம் தெரிவித்திருந்தார்.
ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இழப்பு உலக தமிழ் மக்கள் அனைவருக்குமே ஒரு பெரும் இழப்பாகும். எமது இனத்தின் விடுதலைக்காக பாடுபட்டு, குரல் கொடுத்த அந்த அதி உச்ச தலைவர், ஒரு புனிதமான நாளில் வழிபாட்டுத்தலத்தில் வைத்து சுட்டக்கொல்லப்பட்டது சிறிலங்கா அரசாங்கத்தின் திட்டவட்டமான நோக்கத்தையும் அவர்களின் அரசியலில் சனநாயகம் மற்றும் மனித உரிமைகள் எந்தளவில் பாதுகாக்கப்படுகின்றன என இக் கொடூரச் செயலில் தெளிவாக தெரிகின்றது. 16 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இன்று வரை, ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் திட்டமிட்ட படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லை என்பதும், சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் தனது வன்செயல்களுக்கு பொறுப்பெடுக்க மறுக்கிறது என்பதுமே மறுக்க முடியாத உண்மை ஆகும்.