மே18 தமிழ் இனவழிப்பின் அடையாளம் மட்டும் அல்ல தமிழின இருப்பிற்கான திறவுகோலும் கூட
மே 18 ஈழத்தமிழ் மக்களின் மீது சிறீலங்கா அரசுகளால் தொடர்ந்து நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளின் உச்சம் தொட்ட நாள். அது மட்டும் அல்லாமல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய அளவிலான இனப்படுகொலையின் கறை படிந்த மனித வதையின் அடையாளமாக உலக சரித்திரத்தில் பதிவு செய்யப்பட்ட நாளுமாகும். அதுவே ஈழத்தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் வாழ்வின் மைல்கல்லாகவும் மாறி நிற்கின்றது. தமிழின அழிப்பு என்பது ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் பல ஆண்டுகள் அதாவது ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்த சில ஆண்டுகள் கழித்து ஆரம்பித்து தொடர்ந்து மாறி மாறி பதவிக்கு வந்த சிறீலங்கா அரசுகளால் தொடர்ந்து இன்றுவரை நடாத்தப்பட்டே வருகின்றது. ஆனால் மே18 முள்ளிவாய்க்கால் என்பது இனப்படுகொலையின் அடையாளமாக மாறி நிற்கின்றது
அதற்கு பல காரணங்கள் உள்ளன.
முதலாவதாக முப்பது ஆண்டுகால தமிழர்களின் அரசியல் உரிமைகளை மீட்க நடந்த அனைத்து வழிகளிலுமான சமாதான முயற்சிகள் பயனளிக்காத நிலையில் தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையிலான விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டம் தமிழினப் படுகொலையின் காப்பரணாக உருவெடுத்தது மட்டும் அன்றி ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முனைப்புடன் முன்னேற்றம் கண்டது மட்டும் இல்லாமல் தமிழர்களுக்கான தேசத்தையும் உருவாக்கி சர்வதேசத்தின் ஏற்றுக் கொள்ளலுக்காக காத்து நிற்கும் தருணத்திலேயே இத்தமிழர் தேசத்தை நிர்மூலமாக்க இவ்வாறான இனப்படுகொலை நடந்தேறியது. அடுத்த கட்டமாக இலங்கை அரசுகளால் தொடர்ந்து நடாத்தப்பட்ட இனப்படுகொலை ஆனது முள்ளிவாய்க்காலில் சர்வதேச வெளியில் நடந்தேறியது இதனை பாராமுகமாக தமது சொந்த அரசியல் பொருளாதார இராணுவ நலன்களை கருத்தில் கொண்டு பார்த்து இருந்ததற்கான பலனை பதிலை சர்வதேச சமூகம் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.
இது மட்டும் அல்லாமல் இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய அளவிலான இனப்படுகொலையும் இதுவேயாகும். இதுவே ஈழத்தமிழ் மக்களின் வாழ்வில் இன்று மே18 என்பதும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என்பதும் இனப்படுகொலை அடையாளம் என்பதையும் தாண்டி தமிழரின் இருப்பின் அடையாளம் ஆகவும் தமிழர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்னும் கருத்தாக்கத்தை மட்டும் அன்றி ஈழத்தமிழ் மக்களின் பல தலைமுறைகளுக்கு தமிழ் தேசியத்தின் நேர்கோட்டில் தடம்பிறளாது தொடர்ந்து பயணிக்கும் உறுதி பாட்டையும் மக்கள் மனதில் பதித்து விட்டுள்ளது.
மே 18இல் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டதும் பல லட்சம் மக்கள் காணாமல் போனதும் பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு பெண்கள் குழந்தைகள் அனாதையாக அங்கவினர்களாக ஆக்கப்பட்டதும் தமிழ் மக்களின் மனதில் மறக்க முடியாதவையும் சர்வதேச சமூகத்தால் மறைக்க முடியாதவையுமாகும். இது மட்டும் அன்றி ஈழத்தமிழ் மக்களின் தேசம் சிதைக்க பட்டதும் தமிழ் தேசியத்தின் முதுகில் சிறீலங்கா அரசு மட்டும் இன்றி சர்வதேசமும் சேர்ந்தே குத்தியதும் தமிழ் மக்களின் மனதில் அழியாத வடுவாக மாறி அதுவே தமிழ் தேசியத்தின் மீள் கட்டமைப்பாக மாறி நிற்கின்றது. இதனாலேயே தம் சொந்தங்களை நினைவுகூரும் அதேவேளை தேசியத்திற்கான தேசத்தை மீட்க உறுதி பூணும் அடையாளம் ஆகவும் தமிழர்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் மே18 உணர்வின் உச்சம் தொட்டு நிற்கின்றது. இதேவேளை ஈழத்தமிழ் மக்களுக்கு இழைத்த அநீதிக்கான கர்ம பலனை இன்று சிங்கள தேசம் முழுவதும் கண்கூடாக காண்பதையும் எந்த நலன்களை கருத்தில் கொண்டு சர்வதேச பிராந்திய சக்திகள் சிறீலங்கா அரசுடன் இணைந்து தமிழ் மக்களின் இதயத்தில் அடித்தோம் அதன் பலனை அடையாமல் திண்டாடும் நிலையையும் அவதானிக்க முடிகின்றது.
இறுதியாக ஈழத்தமிழ் மக்களுக்காகவும் தமிழ் தேசியம் சார்ந்தும் செயற்படும் அனைவரும், எமது தேசத்தின் தலைமை பல கட்டங்களில் குறிப்பிட்டதுபோல், இப் பூமி பந்தானது தமது சொந்த நலனுக்காக எதையும் செய்ய துணிந்தது அதன் சாட்சியமே மே 18ஆகும். அதேவேளை நாம் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் துணிவுடன் நேர்மையுடனும் போராடினால் எமக்கான நீதியும் உரிமையும் கிடைக்கும் என்ற உறுதி கொள்ளும் நாளே மே 18 என்பதை உணர்ந்து பணியாற்ற வேண்டும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்