அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை-பட்டயம் வழங்கும் நிகழ்வு
அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் அனுசரணையுடன் இத்தாலி, டென்மார்க், ஆகிய நாடுகளின் தமிழ்க் கல்விக்கழகங்களைச் சேர்த்த ஆசிரியர்கள் கற்றிருந்த பட்டயக்கல்வி கற்கைநெறிக்குச் சிறப்புத் தேர்வினை நடாத்தி அவர்களுக்கான பட்டயம் வழங்கும் நிகழ்வானது இன்று சுவிற்சர்லாந்து பேர்ன் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டு இடம்பெற்றது. இந்நிகழ்வானது சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற முத்தமிழ் விழா மேடையிலே கோலாகலமாக நடந்தேறியுள்ளது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்ட இந் நிகழ்வில் தமிழீழத்தில் இருந்து வருகைதந்திருந்த யாழ் பல்கலைக்கழக ஓய்வு நிலை வாழ்நாட் தமிழ்ப் பேராசிரியர்களான அருணாசலம் சண்முகதாஸ், திருமதி. மனோன்மனி சண்முகதாஸ் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக வருகைதந்து மங்கல விளக்கினை ஏற்றிவைத்திருந்தார்கள். இந்நிகழ்விலே இத்தாலி தமிழ்க் கல்விச்சேவையின் வழிகாட்டுதலில் பட்டயக் கல்விக் கற்கை நெறியைக் கற்ற 8 தேர்வாளர்கள் தகுதி பெற்று பட்டயத்தினைப் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் இத்தாலி தமிழ்க் கல்விச் சேவை தனது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.