வேர்களைத் தேடும் விழுதுகள்-குருநகர்

இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில், யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு நகரம் குருநகர் ஆகும். குருநகரின் கிழக்கு எல்லையை அண்டி சுண்டிக்குளி, திருநகர் ஆகிய  ஊர்கள் உள்ளன. குருநகர் என உச்சரிக்கப்படும் நகரம்,  குரு மற்றும் நகர் (தமிழில் நகர்ப்புற மையம்) என்பதிலிருந்து அதன் சொற்களைப் பெற்றது. குரு என்ற சொல் குருநகரின் பெரும்பகுதியைக் கொண்ட குருகுலம் என்று அங்கு வசிக்கும் மக்களால் அழைக்கப்படும் ஒரு குலப் பெயராகும். குருநகர் யாழ்ப்பாணத்தில் மக்கள் தொகையில்  அடர்த்தி கூடிய பகுதிகளுள் ஒன்றாகும்.  குருநகர் கலை பண்பாட்டில் சிறப்புடனும் விளையாட்டில் வீரத்துடனும் இருக்கும் ஒரு நகர் ஆகும். ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தின் கடற்படைக்கு குருநகர் மக்கள் அதிகாரிகளாக இருந்தனர். குருநகரின் பட்டினத்துறை  வெளிநாட்டு கப்பல்களுக்கான துறைமுகமாக இருந்தது. இங்குதான் மொராக்கோ ஆய்வாளர் இபின் பட்டுடா அவர்கள், ஆரியச்சக்கரவர்த்தி அரசர்களுக்குச் சொந்தமான கப்பல்களைக் கண்டதாகக் கூறுகின்றார்.

முதலில் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் காலத்தில் இங்கு ஒரு துறைமுகம் இருந்தது. யாழ் கோட்டைக்கு இவர்கள் வந்து போவதற்கு எல்லாம் “ரேகடி” என்று கூறப்படும் ஒரு சிறிய இறங்கு துறைமுகம் பயன்படுத்தப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தின் பின் இது பயன்படுத்தப்படாது இன்று முற்றாக அழிந்த நிலையில் உள்ளது. நிலத்தில் பதித்த கற்கள் மட்டுமே காணப்படுகின்றன. யாழ் மண்ணில் பாலம் அமைக்கப்படாத காலத்தில் இந்த துறைமுகமே சிறந்து விளங்கியது.

கடலால் சூழப்பட்ட குருநகரின்  தொழிலாக கடற்றொழில் உள்ளது. ஆரம்பத்தில் பாய் தடி ஊண்டுதல் மூலமே தொழில் செய்துவந்த வடபகுதியில் முதன்முதலில் இயந்திரப் படகு மூலம் தொழில் செய்யும் முறை குருநகரிலேயே ஆரம்பமானது. வடபகுதியின் உணவுத் தேவையின் கடலுணவு பகுதியில்  முக்கால் வாசி பகுதி குருநகரின் கடற்பகுதி மூலமே தீர்க்கப்பட்டு வந்தது. இன்று கரைவலை, ரோளர், ரைலோன், களங்கட்டி, தூண்டுவலை, வீச்சுவலை போன்ற பல தொழில் மூலம் குருநகரின் பொருளாதாரம் வளப்படுத்தப்பட்டு முன்னேறுகிறது.

குருநகரின் இறைவழிபாடு பற்றிக் கூறுவதாயின் இப்பகுதி மக்கள் முழு விகிதமும் கிறிஸ்தவர்களே ஆவர். இங்கு மரியாள் பேராலயம், புனித ஜேம்ஸ் தேவாலயம், புனித புதுமை மாதா  தேவாலயம், புனித செபாஸ்டியன்  தேவாலயம், புனித ஆரோக்கியநாதர்  தேவாலயம், புனித கார்மல், புவி வேளான்கண்ணி தேவாலயம் உட்பட பல தேவாலயங்கள் உண்டு. அதை விட குருநகரிற்கு அண்மையில் உள்ள தீவுகளில் கூட சிறுத்தீவு லூர்த்து அன்னை, பாலா தீவு அந்தோனியார் தேவாலயம் போன்றவற்றை அமைத்து குருநகர் மக்கள் இறை பக்தியில் மிக மிக பற்றுடன் விளங்குகிறார்கள்.

அடுத்து கல்வி நிலையை நோக்கினால் ஆரம்பத்தில்  வெகு தூரம் சென்று படிக்கும் நிலையிலேயே இருந்தது. ஆரம்பத்தில் மிக குறைவாக  இருந்த கல்வி நிலை புனித பற்றிக்ஸ் கல்லூரி வந்ததும் மிகவும் சிறப்படைய ஆரம்பித்தது.

இந்தப் பள்ளி 1850 இல் இத்தாலிய ரோமன் கத்தோலிக்க மிஷனரியான மொன்சிக்னர் ஒராசியோ பெட்டாச்சினி என்பவரால் நிறுவப்பட்டது. பாடசாலை  10ம் திகதி தை மாதம் 1881  இல் சென் பற்றிக்ஸ்  கல்லூரி என மறுபெயரிடப்பட்டு உயர்நிலைப் பள்ளியாகப் பதிவு செய்யப்பட்டது.  கல்வி, விளையாட்டு மற்றும்  சமூக வளர்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் பெருமையின் உச்சத்திற்கு இக்கல்லூரி உயர்ந்து நிற்கிறது.

மேலும் சென் ஜேம்ஸ் பெண்கள் பாடசாலை திருக்குடும்ப சபை சகோதரிகளால் குருநகரில் நிர்மாணிக்கப்பட்ட  பாடசாலை ஆகும். இதனை திரு இருதயப் பாடசாலை என்றும் அழைத்தனர். 14.04.1873  அன்று இப்பாடசாலையை  (உயிர்த்த ஞாயிறின் மறுநாள்) ஆயர் கிறிஸ்ரோப்பர் பொன்ஜீன் ஆண்டகை அவர்கள் ஆசீர்வதித்து ஆரம்பித்து வைத்தார். முதல் நாளில் 80 பிள்ளைகளும் மறுநாள் 156 பிள்ளைகளும் இணைந்துகொண்டார்கள்.  மிகவும் பின்தங்கியிருந்த கல்வி நிலை இன்று பல வைத்தியர்களையும் வழக்கறிஞர்களையும் பல பட்டதாரிகளையும் உருவாக்கி குருநகரின் சிறப்பை மென்மேலும் உயர்த்தி நிற்கின்றது.

மேலும் குருநகரில் ஐஸ் தொழிற்சாலை, சிநோர் (Ceylon, Norway) வலை செய்யும் தொழிற்சாலை என இரண்டு தொழிற்சாலைகள் காணப்படுகின்றன. அடுத்து குருநகரின் முக்கிய சிறப்பு அங்கு விளையாடப்படும் உதைபந்தாட்டம்.

யாழ்ப்பாணத்திலேயே இன்று விளையாட்டில் முன் நிற்கும்  கழகம் என்றால் அது குருநகர் பாடுமீன் கழகம் தான். யாழ்ப்பாணத்திலே இன்று அதிக வெற்றிக் கிண்ணங்களுக்கும் சிறந்த விளையாட்டு   வீரர்களுக்கும் பாடுமீன் கழகம் தாயாகி நிற்கிறது. இன்றும் அகில இலங்கை தெரிவுக் குழுவில் பாடுமீன் விளையாட்டு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஆரம்ப காலத்தில் S.N.I. அன்ரனிப்பிள்ளை முதல் இன்று வரை இந்நிலை தொடர்ந்து குருநகருக்கு ஒரு சிறந்த பெயரை இவ் விளையாட்டு தந்து கொண்டிருக்கிறது.

1986 ஜீன் 10ம் திகதி குருநகர் துறைமுகத்தில்  இருந்து தூயஒளி படகு 31 மீனவர்களை  சுமந்த படி முகத்துவாரம் வெளிச்சக்கூடு தாண்டி மண்டைதீவுக் கடலினுள் சென்றடைந்தனர் அங்கு 27 மீனவர்களை கரையிறக்கி விட்டு நான்கு மீனவர்கள் படகில் இருந்தனர். வலை வளைக்க ஆயத்தமாகிய மீனவர்களை  ஆயுதங்கள் பொருத்தப்பட்ட சிறியரக கப்பலில் முகமூடியணிந்தபடி வந்திறங்கிய  சிங்களக் கடற்படையினர். மீனவர்கள் அனைவரையும் கைகட்டித் தலைகுனிந்து நாரிமுட்டக்கடலில் நிற்கும்படி உறுமினார்கள். பின்பு கோடரி வாள் கத்தி பொல்லாலும் துவக்குப் பிடியாலும் அடித்தும் கொத்தியும் கொன்றொழித்தனர். மண்டைதீவு நீலக்கடல் எங்கும் மீனவர்களின் உடல்  மிதந்து சிவப்பாய் படர்ந்திருந்தது. கொல்லப்பட்ட அனைத்து மீனவர்களும் கத்தோலிக்கர்கள் என்பதனால் அவர்களது உடல்கள் யாழ்.ஆயர் இல்லத்திற்கு அருகாகவுள்ள கொஞ்செஞ்சி மாதா சேமக்காலையில் அடக்கம் செய்யப்பட்டது இவர்களது நினைவு சுமந்த நாள்களை ஒவ்வொரு வருடமும் நினைவுகூர்வதுடன் 2022 ம் ஆண்டு அவர்களது 36 வது ஆண்டு நினைவுகளை குடும்பங்கள் நினைவுகூர்ந்தனர். அடுத்து எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடி   எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த குருநகரைச் சேர்ந்த மாவீரர்களின் தியாகம் போற்றுதற்குரியது.

இவர்களை விட உதவிநிதிப் பொறுப்பாளர் பாலதாஸ், தேவதாஸ், குயன்ரன் ஜோய், கிர்மானி முதலியோரும் மாவீரர்கள் ஆனார்கள்.

தமிழீழ காவல் துறையின் முதன்மை ஆய்வாளராகவும், மாவட்ட கண்காணிப்பாளராகவும் செயற்பட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்து சுகயீனம் காரணமாக சாவடைந்த இம்மானுவேல் நிக்சன் ரஞ்சித்குமார் அவர்களும் இப்பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதையிட்டு பெருமை கொள்கிறோம்.

மேலும் மாவீரரான தமிழீழ ஆய்வு நிறுவனத்தின் முக்கிய ஆலோசகரும் எண்பத்தி ஏழு வெளிநாட்டு நாவல்களை தமிழில் மொழிபெயர்த்த, பொறியியலாளருமான வின்சன் யோசவ்அவர்களும் இவ்வூரைச் சேர்ந்தவராவர்.

இவ்வாறாக எனது வேரினைத் தேடுகையில், தனித்துவம், வீரம், தியாகம் போன்ற பல சிறப்புக்களை தன்னகத்தே கொண்ட   மண்ணின்  பெருமைகளை கூறுவதையிட்டு பெருமிதம் கொள்கிறேன்.

நன்றி

ரெச்சியோ எமிலியா திலீபன் தமிழ்ச் சோலை  05

உங்கள் கவனத்திற்கு