விடியலுக்கு முந்திய க(வி)தைகள்
விடியலுக்கு
முந்திய க(வி)தைகள்
பெருவிருட்சம் இருந்தபோது
விதைகள் விழுந்துகொண்டே
இருந்தன
விழுந்த விதைகள் ஒன்றும்
வீணாகிப் போனதல்ல
விதைக்கப்பட்டன
விடியலுக்கு ஏங்கியவை
இருட்டில் உறங்கியிருந்தன
வீரியம் கொண்டெழுவதற்காய்
நாற்று மேடைகளும்
நன்றாய் இருந்தன
விடிய விடிய காவல்
தெய்வங்கள் அவர்களுக்கு
நரிகளில் நம்பிக்கையில்லை
கார்த்திகை ஒரு நாள்
பெரும் மழைவரும்
விதைகள் விழித்துக்கொள்ளும்
ஏற்றிய விளக்குகள்
கண்ணீரில்தான் அணையும்
விடியலை தேடிய விதைகள்
மீண்டும் மீண்டும்
கனவுகளை தேடி தேடி
கண்சிமிட்டிக்கொண்டிருக்கும்
ஒரு நாள்
விருட்சத்தை காணவில்லை
புயலுக்குள் புதைந்து
இருக்கலாம்
சிதறிய பல்லாயிரம்
விதைகள் சாட்சிகளாகின
காட்சிகளை காணும் முன்னே
கழுவிச் சென்றது வெள்ளம்
வாய்க்கால் வழியாக
நந்திக் கடலுக்குள்
குருதிவாடை மேலெழுந்து
காற்றில் கலந்தது
வாடைகளை கழுவ
நீருக்கு நாதியில்லை
நீதிக்கு மட்டும் என்ன
இருக்கவா போகிறது
இருளுக்கு பிந்திய க(வி)தைகள்
விருட்சம் தொலைந்த பின்னர்
தேவலோக நரிகள் பரிகளாயின
நாரதர்கள் நாடகங்கள்
கலகங்களில் தொடர்கிறது
தேவர்கள் திசை தெரியாமல்
ஒற்றன் தானே நாரதர்
என்பது அவர்களின்
உண்மை
கார்திகையும் மழையும்
வானிலிருந்து வருவதற்குள்
இடம்மாறி வந்துவிடும்
பேய்கள் (13)வருடமாய்
பெய்துவிட்டு போகிறது
அது பேய்மழைதான்
மயானம் மழைகளால்
இதுவரை நனைந்ததில்லை
இனியும் சாத்தியமா?
நிலத்தை சுரண்டிக்கொடுக்கும்
மிகை சிரம தானம்
பேய் மழையடித்த ஈரத்தில்
பகைகள் புகைந்து
கொண்டிருப்பது
ஒன்றும் புதிதில்லையே
சுரண்டல்களை கண்டதும்
விதைகள் விழித்துக்கொள்ளும்
முளைக்கத் தலைப்பட்டால்
தலைகள் சீவப்படும்
சிங்கங்கள் சிலேடையாக
பேய்களுடன் பேசிக்கொள்ளும்
வசனங்கள் வாக்கெடுப்பாய்
இருக்கலாம் அத்தனையும்
தேர்தல் இலக்கணங்கள்
நாளையுடன் பேயாண்டு(13)
முடிகிறது
மீண்டும் மீண்டும்
இப்பேய்கள் வரத்தான்
போகிறது
பேய்களுக்கு வாக்(கு)கப்பட்டால்
மயானத்திலிருந்து எழுந்து
நடந்தன விதைகள்
அங்கே அத்தனையும்
செங்காந்தள் மலர்களாய்
திரு சாம்பசிவம் ஜெயதாஸ்
பியல்லா