தமிழின அழிப்பின் உச்சம் தொட்டு பதினொராண்டுகள் கடந்த நிலையிலும் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்க்கமான கவனத்தை ஈர்ப்பதில் தொடர்ந்து ஈழத்தமிழ் மக்கள் தாயகத்திலும் புலத்திலும் முனைப்புடன் போராட வேண்டியே உள்ளது.
தற்போதைய காலச்சூழலில் சர்வதேசமே மகுடை நுண்மி(கொரோனா வைரசு) தொற்றுநோய் தாக்கத்தில் தமது கவனத்தை செலுத்தி நிற்க சிறீலங்கா சிங்கள பௌத்த இனவாத அரசோ மேலும் தனது நில ஆக்கிரமிப்பு மற்றும் பட்டினி சாவை நோக்கும் தமிழ் பாமரமக்கள் என தமிழ்மக்களை மேலும் உளவியல் ரீதியாக பாதிப்புக்கு உள்ளாக்கி தமிழ் மக்களின் ஆன்மீக பலத்தை சிதைக்கும் நோக்கில் செயற்ப்பட்டு வருகின்றது.
புலத்தில் வாழும் ஈழத்தமிழராகிய நாமும் இத்தாலி நாட்டில் தமிழரின் அடையாளம் இனவழிப்பு உட்பட பல விடயங்களில் பட்டறிவு பெற்ற தமிழ் இளையோரின் அர்ப்பணிப்பாலும் விடாமுயற்சியினாலும் தற்போதைய சூழலில் உச்ச பயன்பாட்டில் உள்ள சமூகவலைத்தளங்களூடாக பல்வேறு வகையான தேசியம் சார்ந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே அந்தவகையில் இத்தாலி நாட்டில் வாழும் ஈழத்தமிழ் சிறார்கள் இன அழிப்பு இனவெழுச்சி சார்ந்து வெளிப்படுத்திய ஆக்கங்களை இங்கு காணலாம்.
படங்கள்
காணொளிகள்
கட்டுரைகள் மற்றும் கவிதைகள்
ஓயாதஒப்பாரிகள்
முள்ளிவாய்க்காலை மறக்க முடியுமா?
குண்டுமழையில் குருதி வெள்ளமும்
பிளந்த பிணங்களும் கலந்த மண்ணது
ஆண்டுகள் பதினொன்று ஆகிறது – ஆயினும்
மாண்டவரின் ஒப்பாரிகள் மறக்குமோ?
சிங்களத்தின் கோரத்தாண்டவத்தால்
செல் மழை, கொத்துக் குண்டுகள், பொஸ்பரசு என
கொன்று குவிக்கப்பட்டது தமிழினம்
தாயின் இறப்பைப் பார்த்த பிள்ளையின் கதறலும்
துள்ளும் சேயின் இறப்பைக் கண்முன்கண்ட தாயின் அலறலும்
நெஞ்சை விட்டகலா வலிகளாயின
மானமே உயிரென வாழ்ந்த எம்மங்கையர்
மான பங்கப்படுத்தப்பட்டனர்
ஊன் உறக்கமின்றி உறவுகளை இழந்து – நாதியற்று
சொந்த மண்ணில் அடிமைகளாயினர் தமிழர்
முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தொலைத்தோம்
இனவிடுதலைப் போரில் தொலைத்தோம் – என
காணாமற்போனோர் உறவுகளின் கதறல்கள்
இன்றுவரை ஓயாத ஒப்பாரிகளாய் ஓங்கி ஒலிக்கின்றன
மணிவண்ணன் மதுஷா
திலீபன்தமிழ்ச்சோலை
பலெர்மோ
இத்தாலி.
முள்ளிவாய்க்கால் மனிதப் படுகொலை
நம் வாழ்வில், நாம் பல தருணங்களில் பிறந்து,வளர்ந்த மண்ணையும், போராட்ட வரலாற்றையும் நினைத்துப்பார்த்திருப்போம். ஆனால் அந்த நினைவு ஒரு விம்பமாகவே ஆகிவிட்டது. சிங்களப் பேரினவாதத்தால் புதைக்கப்பட்ட எங்கள் உரிமைகளுக்காக ஏங்கி நிற்கின்றோம்.
இலங்கைத்தீவானது, ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலைபெற்ற காலத்திலிருந்து, தமிழர்கள் எந்தவிதமான அரசியல் உரிமைகளும் இன்றி இன்றுவரை இரண்டாம் நிலைக் குடிமக்களாகவே வாழ்கின்றனர். தமிழரின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே தமிழர்விடுதலை உரிமைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழர்களின் வறலாற்றில் பல்வேறான வழிமுறைகளில் இனப்படுகொலைகள் நடந்தேறின. இவை பல்வேறு காலகட்டங்களில் சத்தமில்லாமல் நடந்தேறின, ஆனால் தமிழர்களின் மனதில் முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலையே கனத்த வடுவாக பதிந்துள்ளது.
பண்டாரவன்னியன் ஆண்ட வன்னிபெருநிலப்பரப்பின், நந்திக்கடல் அருகே அமைந்திருக்கும் சிறு நிலப்பரப்பே முள்ளிவாய்க்கால் ஆகும். இங்கு 2009 காலப்பகுதியில் தமிழினப்படுக்கொலையின் இறுதிக்கட்டம் நிகழ்த்தப்பட்டது. இவ் இறுதிக்கட்டத்தில் பௌத்த சிங்கள அரசால் வன்னிநிலப்பரப்பில் பொருளாதாரத்தடை ஏற்படுத்தப்பட்டு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையம், ஊடகத்துறையினர், மருத்துவத்துறையினர், அரச ஊழியர்கள், தொண்டு நிறுவனஙகள் வலுக்கட்டாயமாக வெளியேறுமாறு பணிக்கப்பட்டனர்.
பொது மக்களின் பாதூகாப்புக்கருதி தமிழீழ விடுதலைப் போராளிகளால் ஆயுதங்கள் மௌனிக்கப்படுகின்றன என அறிவிககப்பட்டது. இக்கால கட்டத்தில். பொது மக்களை, பாடசாலைகள், ஆலயங்கள் போன்றவற்றில் தஞ்சம் புக பகிரங்க அறிவிப்பு செய்த இலங்கை அரசு, பொது மக்கள் தஞ்சம் அடையும் எவ்விடத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்னும் போர்மரபை மீறி மருத்துவமனைகள் உட்பட அனைத்து இடங்களிலும் விமானத்தாக்குதல் செய்து மனிதப்படுகொலையை உண்மையாக்கியது. பௌத்த சிங்கள இனவாத அரச இராணுவத்தால் இந்த மனிதப்படுகொலையில் பல்லாயிரக்கணக்காண அப்பாவித் தமிழ் பொது மக்கள், போர் விதிமுறைகளை மீறி இரசாயன வாயு ஆயுதங்களையும், கொத்துக்குண்டுகளையும் பயன்படுத்தி ஈன இரக்கம் இன்றி படுகொலைசெய்யப்பட்டனர். ஏனைய உலக நாடுகளின் உதவியுடன் முப்படைகளின் பலத்தையும் பயன்படுத்தி கற்பினிகள், பெண்கள், குழந்தைகள் வயோதிபர் என்று வேறுபாடு இன்றி கொன்று குவித்தார்கள். போராளிகளும் எம் மக்களைக் காப்பாற்றும் போராட்டத்தில் உயிர் கொடையானார்கள்.
அடங்காப்பற்று என்று அழைக்கப்படும் வன்னி மண்ணின் இறுதி மன்னரான பண்டாரவன்னியனின் மாவீரனுக்கான நடுகல் அமைந்த முல்லைத்தீவு மாவட்டத்திலேயே இறுதிக்கட்ட மனிதப்படுகொலை நடந்தேறியதென்பது வெறும் செய்தி அல்ல வீரகாவியமான வறலாற்று பதிவு.
இந்த இனவழிப்பை, மனிதப்படுகொலை என்னும் சொல்லாடல் மூலம் , தமிழ் இனம் நினைவு கூர்ந்து, மே 18 இல் அஞ்சலிக்கின்றனர்.
வி. ஏஞ்ஜஸ்
திலீபன் தமிழ்ச்சோலை
பலெர்மோ,
இத்தாலி
முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை
இன அழிப்பு என்பது மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிகக் கடுமையான அல்லது கொடூரமான குற்றச் செயலாகும். தனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமன்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும்.
தங்களின் உரிமைக்குப் போராடிய தமிழினத்தை முற்றாக அழித்திட,இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சமல்ல. பல நாடுகளில் பல வடிவங்களில் இனப்படுகொலை நடந்தேறியுள்ளது. அந்த வகையில் இன அழிப்பு என்பது ஓர் இனத்தை போரில் கொல்வதிலும் அவர்களை அடித்து துரத்துவதிலும் சித்திரவதை செய்வதிலும் அடங்கவில்லை.
அவ்வினத்துக்கு எதிராக உடல் மற்றும் உள ரீதியாக புரியப்படும் கொடூரமான செயல்களும் இனப்படுகொலை தான். ஓர் இனத்தை அழிப்பதும், அவ் இனத்தின் பிறப்பைப் தடுப்பது இன அழிப்புத்தான் என, 1948 இல் இனப்படுகொலை குறித்த ஜ. நாவின் தீர்மானத்தில் உள்ளடக்கியுள்ளது. இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.
அந்த வகையில் உலகத் தமிழர்கள் மத்தியில் ஈழம் மலரும் என்னும் பெரும் நம்பிக்கை தொடர்ந்து கொண்டிருந்த போது தான்! யாரும் எதிர்பார்க்காத கொடூரம் நடந்தேறியது.சுமார் 11 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும், உலகத் தமிழர்களின் இதயங்களில் இன்னமும் குருதியாக வடிந்து கொண்டிருப்பது மே 18 இன அழிப்பு.
முள்ளிவாய்காலில் 2009 ஆம் ஆண்டில் இனவாத இலங்கை அரசால் இக் கொடூரம் நடத்தப்பட்டது. மக்களைக் கேடயமாக வைத்து, முன் நகர்வினை மேற்கொண்டு புலிகளை சூழ்ச்சியால் வீழ்த்திய சிங்கள இராணுவம் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து மாபெரும் இன அழிப்பிற்கு வித்திட்டது.
காலம் காலமாக தமிழ் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் எங்கும் அன்றைய தினத்தில் மரண ஓலங்கள் ஒலித்தது.நிற்காமல் தொடர்ந்தது ஆங்காங்கே அழும் குரல்கள்.துப்பாக்கித் தோட்டாக்களும், எறி குண்டுகளுக்கும் பலியானவர்கள் போக, எஞ்சியவர்கள் சித்தம் இழந்து முள்ளிவாய்க்கால் வெறுமையாகப் போனது.
போர் நடக்கும் போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, வழிபாட்டுத் தலங்கள் உட்பட பொதுமக்கள் தஞ்சம் புகும் எவ்விடத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பது போர் மரபு. ஆனால் சிங்கள இராணுவத்தின் நோக்கம், விடுதலைப் புலிகளை வீழ்த்துவதல்ல! மாறாய் தமிழினம் இருக்கவே கூடாது என்பது தான்.அங்கெல்லாம் தாக்குதல் நடத்தி, மனித இனத்தையே அழித்தார்கள்.முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த உச்சக்கட்டப் போரின் போது, படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்தது என உறுதி செய்யப்பட்டது.
பதினொரு ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும் , எந்தவொரு விசாரணையும் இன்றி சிங்கள இனவாதம் உலா வருவது, தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குழிதோண்டிப் புதைக்கப்பட்டு விட்டது என்றுதான் கவலையுடன் கூற வேண்டும்.
கடந்த 2006ஆம் ஆண்டு யூலை மாதம் தொடங்கி மே 2009 வரை சுமார் 1இலட்சத்து 50 ஆயிரம் பேரை சிங்கள இனவாதம் படுகொலை செய்தது. இது எவ்வளவு மோசமான வலி மிகுந்த முள்ளிவாய்க்கால் மனிதப்படுகொலை.
உலகத் தமிழர்களே! இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக கரம்கோர்ப்போம். மே18ஜ சர்வதேச நாளாக நினைவு கூர்ந்து உலக நாடுகளுக்கு ஒவ்வொருவரின் குரலும் ஒலிக்க அழுத்தம் கொடுப்போம் வாரீர்.
கிருத்திகா நந்தகுமார்
ஜெனோவா,
இத்தாலி