தமிழின அழிப்பின் உச்சம் தொட்டு பதின்மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும் ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கான மற்றும் அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்கள் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்க்கமான கவனத்தை ஈர்ப்பதில் தொடர்ந்து ஈழத்தமிழ் மக்கள் தாயகத்திலும் புலத்திலும் முனைப்புடன் போராட வேண்டியே உள்ளது.
புலத்தில் வாழும் ஈழத்தமிழராகிய நாமும் இத்தாலி நாட்டில் தமிழரின் அடையாளம் இனவழிப்பு உட்பட பல விடயங்களில் பட்டறிவு பெற்ற தமிழ் இளையோரின் அர்ப்பணிப்பாலும் விடாமுயற்சியினாலும் தற்போதைய சூழலில் உச்ச பயன்பாட்டில் உள்ள சமூகவலைத்தளங்களூடாக பல்வேறு வகையான தேசியம் சார்ந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதும் அனைவரும் அறிந்ததே அந்தவகையில் இத்தாலி நாட்டில் வாழும் ஈழத்தமிழ் சிறார்கள் இன அழிப்பு இனவெழுச்சி சார்ந்து வெளிப்படுத்திய ஆக்கங்களை இங்கு காணலாம்.
தமிழின அழிப்பு நாள்
மே 18
தழிழர்களின் வரலாற்றில் மறக்க முடியாத துயரங்களை சுமந்த நாள். அவர்களுக்குச் சொந்தமான வாழிடத்தை அந்த இனத்திடமிருந்து பறித்து அவர்கள் உரிமைகளை மறுத்தது மட்டுமன்றி ஓர் இனத்தின் வரலாற்றையும் அதன் தொன்மையையும் அழிப்பது என்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். எங்களின் உரிமைக்கு போராடிய எம் இனத்தை அழித்திட சிறிலங்கா அரசு கட்டவிழ்த்து விட்ட கொடூரங்கள் கொஞ்சம்நஞ்சமல்ல. அவை வார்த்தைகளால் விபரிக்க முடியாத வலிகள்.
முள்ளிவாய்க்கால் எனும் பெயரை அறியாத தமிழன் இல்லை என்று கூறுமளவுக்கு ஒர் இனத்தின் மீதான அவலம் நிகழ்த்தப்பட்ட இடம் முல்ளலத்தீவு மாவட்டத்தின் குறுகிய பிரதேசம். இன்று சர்வதேச அளவில் அறியப்பட்ட பகுதி. கொத்துக் குண்டுகள், இரசாயனக் குண்டுகள் என வளரயறையின்றி காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை அரச படைகள் அரங்கேற்றின.
இன அழிப்பு என்பது ஒர் இனத்தைக் கொள்வதிலும், அவர்களை அடித்துத் துரத்துவதிலும், சித்திரவதை செய்வதிலும் அடங்கி விடவில்லை. மாறாக அவ்வினத்தை உடல், உள ரீதியாக துன்புறுத்துவதும் இனப்படுகொலைதான்.
ஓர் இனத்தின் அழிப்பு என்பது ஒவ்சவாரு காலகட்டத்திலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றது. ஈழம் மலரும் என்ற பெரும் நம்பிக்கையோடு தொடர்ந்து கொண்டிருந்த போதுதான் முள்ளிவாய்க்கால் அவலம் நடந்தேறியது. 13 ஆண்டுகள் எட்டி விட்ட நிலையிலும் இன்னமும் எம்மவர்களின் இதயங்களில் குருதி வடிந்து கொண்டிருக்கும் நாள்தான் மே 18.
சிறிலங்கா அரசு எமக்கெதிராக மேற்கொண்ட இன அழிப்பின் உச்சம் நடந்தேறிய நாள். உறவுகளை, உடமைகளை, உடல் அங்கங்களை இழந்து சொந்த நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபிணம்போல் உயிரை மட்டும் பிடித்து கொண்டு வாழும் எம்மவர்களின் நிலை வலி நிறைந்தது.
மே 18 துயரத்தை நினைவு கூறுவதன் மூலம் எமக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட பேரவலத்தை உலக அரங்கில் இன்னமும் ஒழிக்க செய்வதோடு இறந்த எம் உறவுகளுக்கு மனதில் ஆறாத ரணத்துடன் கண்ணீர்ப் பூக்களை சமர்ப்பிக்கின்றோம் இந்நாளில்.
ர. மதுமிதன்
திலீபன் தமிழ்ச்சோலை
பொலோனியா