தமிழீழத் தேசிய அரசியல் செயற்பாட்டாளர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்களிற்கு ‘மாமனிதர்’ மதிப்பளிப்பு

தமிழீழத் தேசிய விடுதலை என்னும் இலட்சியத்தின்மீது அசைக்கமுடியாத பற்றுறுதியும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளிற்காக எத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொள்ளும் துணிச்சலும் கொண்ட தமிழ்த்தேசிய அரசியல் ஆளுமையான கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்கள், 14.11.2026 அன்று உடல்நலக்குறைவினால் சாவடைந்தார் என்ற செய்தி தமிழ் மக்களை ஆழ்ந்ததுயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழீழ விடுதலைப்போராட்டம் எழுச்சிபெற்ற காலத்திலிருந்தே,தமிழ்த்தேசிய அரசியலில் தன்னை இணைத்துக்கொண்ட
சிவாஜிலிங்கம் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினராகவும் வடக்கு மாகாணசபை உறுப்பினராகவும் வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளராகவும் பொறுப்புகளை வகித்தவர். பதவிகளையும் அரசியல் அதிகாரங்களையும் தாண்டி, தமிழீழ விடுதலை இலட்சியத்திற்கும் தமிழ் மக்களின் உரிமைகளிற்கும் முதன்மையளித்து, தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இனத்தின் விடிவுக்காக அர்ப்பணித்தவர்.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் , சிந்தனைகளை உளப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ விடுதலை இலட்சியத்தின்மீது பற்றுறுதியுடன் இறுதிவரை பயணித்தவராவார். தனது அரசியல் பயணத்தில் எத்தகைய நெருக்கடிகள் எழுந்தபோதும் தனது கொள்கையிலிருந்து பின்வாங்காது, தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைத் துணிச்சலுடன் வெளிப்படுத்தி வந்ததோடு தேசியத்தலைவரின் முக்கிய செய்திகளை அயல்நாட்டு தலைவர்கள், இராசதந்திரிகள், தமிழினப் பற்றாளர்களிற்கு கொண்டுச்சென்று சேர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்.

2009ஆம் ஆண்டிற்குப் பின்னர், தமிழீழத்தாயகத்தில் நிலவிய சிறிலங்காப் பேரினவாத அரசின் கடுமையான இராணுவ, அரசியல் நெருக்கடிகளிற்கு மத்தியில், தமிழ்த்தேசிய உணர்வையும் விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நினைவுகளையும் உயிர்ப்புடன் பேணுவதில் முன்னின்ற இவர், மாவீரர்நாள் நினைவேந்தல்;, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், தமிழின அழிப்பிற்கான நீதிகோரும் போராட்டங்கள், காணாமலாக்கப்பட்டோர் மற்றும் நிலமீட்புப் போராட்டங்கள் அனைத்திலும் உணர்வோடும் துணிச்சலோடும் நின்று தேசக்கடமை செய்த உணர்வாளராவர். தேசியத்தலைவர் அவர்களின் பெற்றோர்களான திருவேங்கடம் வேலுப்பிள்ளை, பார்வதி அம்மாள் ஆகியோரின் மறைவின்போது நிலவிய கடுமையான அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது, அவர்களது உடல்களைப்
பொறுப்பேற்று வல்வெட்டித்துறையில் இறுதி மரியாதைகளை முன்னின்று செய்வதில் இவர் ஆற்றிய பங்கு, அவரது பற்றுறுதியையும் கடமையுணர்வையும் துணிச்சலையும் வெளிப்படுத்தியமைக்கான சான்றாகும்.

தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிகளிற்கும் தமிழின அழிப்பிற்கும் சர்வதேசநீதி வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த அவர், சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்கள் தொடர்பான சுயாதீன சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டுமென வெளிப்படையாக கூறிவந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழீழத் தேசியவிடுதலை இலட்சியத்தின்மீது அவர் கொண்டிருந்த ஆழமான பற்றுறுதியும் தமிழ்த்தேசிய நினைவுகளைப் பாதுகாப்பதில் வெளிப்படுத்திய அசைக்கமுடியாத துணிச்சலும் தமிழ் மக்களின் உரிமைகளிற்காக மேற்கொண்ட நீண்டகால அரசியல் பணிகளும் தனிப்பட்ட வாழ்க்கையில் பேணிய எளிமையும் அவரைத் தமிழ்த்தேசிய வரலாற்றில் உயர்ந்த இடத்தில் நிலைநிறுத்தியுள்ளன.

தமிழீழத் தேசியத்தலைவர் மீதும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஆழமான பற்றுக்கொண்டு, இறுதிவரை துணிவுடனும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இவரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக்கொள்வதுடன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம் அவர்கள், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆற்றிய தேசப்பணிக்காக, தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்சிந்தனையின் வழிகாட்டுதலில் ‘மாமனிதர்’ என்ற தமிழீழத்தின் அதியுயர் தேசியவிருதை அவருக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகின்றோம்.

‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்’

அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்

உங்கள் கவனத்திற்கு