இத்தாலி ஜெனோவா பிரதேசத்தில் தமிழர் இல்லத்தில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் திறந்து வைப்பு
இத்தாலி ஜெனோவா பிரதேசத்தில், தமிழர் இல்லத்தில் தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.
‘’பிறர் வாழத் தன்னுயிரைத் தியாகம் செய்த திலீபனின் வரலாறு தமிழர் வரலாற்றில் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்’’
அகிம்சை வழியில் போராடிய திலீபனின் மகத்தான தியாகம் தமிழீழ போராட்ட வரலாற்றில் முக்கியமானது. அப்பேற்பட்ட தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களை நெஞ்சில் நிறுத்தி அவர் நினைவாக அவரது திருவுருவப்படம் தமிழர் இல்லத்தில் (18/10/2026) ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது .
இத்தருணத்தில் ஜெனோவா வாழ் ஈழத் தமிழர்கள், திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியர்கள், மாணவர்கள், இத்தாலி தமிழ்க்கல்விச்சேவைப் பொறுப்பாளர், ஜெனோவா பிரதேச செயற்பாட்டாளர்கள், மகளிர் அமைப்பு உறுப்பினர்கள், இளையோர் அமைப்பு உறுப்பினர்கள், பெற்றோர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொடிவணக்கப் பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அகவணக்கம் செலுத்தப்பட்டு திருவுருவப்படம் திறக்கப்பட்டது. திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவித்து ஈகைச்சுடர் ஏற்றி மலர்வணக்கம் சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு உரையாற்றியதைத் தொடர்ந்து, ஐந்து அம்சக்கோரிக்கைகளும் அவர் கூறிய இறுதி வாக்கியங்களும் எடுத்துரைக்கப்பட்டன. சமநேரத்தில் இத்தாலி மொழியிலும் அவை வாசிக்கப்பட்டன. நிறைவாக தமிழரின் தாரக மந்திரத்துடன் நிறைவு பெற்றது.
’தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்’
















