ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை ஆசிரியப் பெருந்தகைகளுக்கு மகுடம் சூட்டும் நிகழ்வும் மதிப்பளிப்பு நிகழ்வும் 2026

ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையின் முதுசங்களான மூத்த ஆசிரியப்பெருந்தகைகள் திருமதி. சுசீலா இரத்தினம், திருமதி. பவளராணி சற்குணலிங்கம் இவர்கள் இருவரது தமிழ்ப் பணிக்காலத்தைப் பாராட்டியும் இவர்களை வாழ்த்தியும் மதிப்பளிக்கப்பட்டது. அகரம் சொல்லி தந்து சிகரம் தொட வைப்பவர்கள் ஆசிரியப்பெருந்தகைகள். அத்துடன் நின்று விடாமல் மாணவர்களுக்குள் மொழிப்பற்றுடன் இனப்பற்றையும் பண்பாட்டையும் நல்லொழுக்கத்தையும் விதைத்து, அவர்களைத் தரணியில் உயரவைப்பவர்கள் ஆசிரியப்பெருந்தகைகள். பரிணாம வளர்ச்சியில் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை முப்பது ஆண்டுகளைக் கடந்து நிற்கும் இவ்வேளையில், தங்கள் கொள்கையிலிருந்து மாறாமல் ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலைக்காகவும் தேசியத்திற்காகவும் இன்று வரை ஒன்றுபட்டு நிற்கும் இவர்கள் பாராட்டுதலுக்குரியவர்கள் ! போற்றுதலுக்குரியவர்கள் !

அப்பேற்பட்டவர்களைப் போற்றி, (18/10/2026) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:00 மணிக்கு தமிழர் இல்லத்தில் நுழைவாயிலிருந்து, ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்களின் (பாண்டு) இசைக்குழு வாத்தியங்கள் முழங்க, வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வருகைதந்திருந்த இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளர் அவர்களும் ஆசிரியப் பெருந்தகைகள் திருமதி.சுசீலா இரத்தினம், திருமதி.பவளராணி சற்குணலிங்கம் அவர்களும் திலீபன் தமிழ்ச்சோலை மாணவர்கள், ஆசிரியர்கள், பழையமாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் புடைசூழ இளம் ஆசிரியர்கள் மலர்மாலை அணிவித்து, அவர்களை வரவேற்று, மேடைக்கு அழைத்து வரப்பட்டார்கள். அத்தருணம் மேடையில் ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையின் மூன்று தலைமுறையினர் சங்கமித்து நிற்கும் அழகிய காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இந்த நெகிழ்வான நேரத்தில் பாடசாலைக்கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துப்பா, பாடப்பட்டு, திலீபன் தமிழ்ச்சோலையின் முத்துவிழாப் பாடல் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றப்பட்டது. வரவேற்புரையைத் தொடர்ந்து, திலீபன் கலைக்கூட மாணவிகளின் வரவேற்பு நடனத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளர் அவர்களுக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கும் திலீபன் தமிழ்ச்சோலையின் பழைய மாணவர்கள் பொன்னாடை போர்த்தி மதிப்பளித்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளரை வாழ்த்தி வாழ்த்துரை வாசித்து மதிப்பளிக்கப்பட்டது. தொடர்ந்து, அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையால் ஆசிரியப் பெருந்தகைகளை மதிப்பளித்து, மதிப்பளிப்புச்சான்றிதழ் இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, இத்தாலி தமிழ்க்கல்விச் சேவையால் ஆசிரியப் பெருந்தகைகளை மதிப்பளித்து இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளர் அவர்களால் வழங்கப்பட்டது. இறுதியாக ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலையால் ஆசிரியப் பெருந்தகைகள் மதிப்பளிக்கப்பட்டு, ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலைப் பொறுப்பாளர் திரு. நாகராசா நந்தகுமாரால் மதிப்பளிப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தொடர்ந்து, பெருந்தகைகளை வாழ்த்தி இத்தாலி கல்விச்சேவைப் பொறுப்பாளர், ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலைப் பொறுப்பாளர், ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் அனைவரும் இணைந்து வாழ்த்துமாலை அன்புப் பரிசாக வழங்கி வாழ்த்திப் படிக்கப்பட்டது.

தொடர்ந்து ஆசிரியப்பெருந்தகைகள் தங்களது நெகிழ்வான தருணத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்கள். ஆசியப்பெருந்தகைகளின் மதிப்பளிப்பைத் தொடர்ந்து ,‘’ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்” என்ற திருவள்ளுவரின் வாக்குக்கிற்கிணங்க, மழலையர் நிலையிலிருந்து ஆண்டு 12 வரை தாய்மொழியைத் திறம்படக் கற்று நிறைவு செய்து, பாடசாலைக்குப் பெருமை சேர்ந்த மாணவர்களைப் பாராட்டி இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டது. ஆண்டு 12 ஐ நிறைவு செய்த மாணவர்கள் மேடையிலிருந்து வெளியேறும் சமநேரத்தில் ஆண்டு 1 இல் தடம் பதிக்கும் மாணவர்கள் உள்ளே வந்தார்கள். அச்சின்னஞ் சிறு சிறார்களுக்கு மதிப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இத்தாலி கல்விச்சேவைப் பொறுப்பாளரின் சிறப்புரையுடன் மதிப்பளிப்பு நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.

ஜெனோவா திலீபன் தமிழ்ச்சோலை

உங்கள் கவனத்திற்கு