இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையில் நடைபெற்ற 30 ஆவது ஆண்டு நிறைவு விழா
புலம்பெயர் மண்ணில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடைய சிந்தனையில் உருவான இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையின் 30ஆவது ஆண்டு விழா பேரெழுச்சியுடன் அரங்கேறியது!

புலம்பெயர் மண்ணில் அன்னைத் தமிழைக் காத்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் உன்னத பணியைச் செவ்வனே ஆற்றிவரும் இத்தாலி போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா அனைவரும் வியக்கும் வண்ணம், அலைகடலெனத் திரண்ட தமிழ் நெஞ்சங்களின் முன்னிலையில் பேரெழுச்சியுடனும் வரலாற்றுச் சிறப்புடனும் அரங்கேறியது.
விழாவானது பொதுச்சுடர் ஏற்றப்பட்டு,தமிழீழத் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதை தொடர்ந்து தாயக விடிவிற்காகத் தன்னுயிர் ஈந்து சரித்திரமான மாவீரர்களுக்கும், சிறிலங்கா இந்திய படைகளாலும் இரண்டகர்களாலும் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கும் அகவணக்கம் செலுத்தப்பட்டு , தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு பிரதான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
விழாவின் அதிகாரப்பூர்வ அரங்கு நிகழ்வுகள் இன்சுவை ததும்பும் வரவேற்புரை மற்றும் ஒளி உமிழும் மங்கலவிளக்கேற்றலுடன் முறைப்படி ஆரம்பமாகியது.
போலோனியா திலீபன் தமிழ்ச்சோலைச் செல்வங்கள் தங்கள் மழலைத் தமிழாலும், சிலம்பொலிக்கும் நடனத்தாலும் கலைப் பெருவிருந்து படைத்தனர். அவர்களின் கண்கவர் கலை நிகழ்வுகள் பார்வையாளர்களின் கண்களுக்கும் கருத்திற்கும் பெருவிருந்து படைத்தன. முத்தாய்ப்பாக உணர்வுகளைத் தட்டி எழுப்பும் வகையில் பெற்றோர்களின் கோலெடுத்தாடிய குதூகல நடனம் அரங்கேறியது.
விழாவின் இறுதி முத்திரையாக, நடப்புக்கல்வியாண்டு மாணவர்களுக்கான மதிப்பளிப்பு, பள்ளியில் தொய்வின்றி 12ஆம் ஆண்டுவரை கற்றுமுடித்து சாதனை படைத்த மாணவர்களுக்கான சிறப்பு மதிப்ப்பு, பள்ளியின் பெருமைமிகு தூண்களாக விளங்கும் பழைய மாணவர்களுக்கான நெஞ்சார்ந்த மதிப்பளிப்பு, அன்னைத் தமிழை அயராது புகட்டும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களுக்கான மதிப்பளிப்பு, இத்தாலி தமிழ்க் கல்விச்சேவைப் பொறுப்பாளருக்கு தமிழ்ச் சமூகத்தின் சார்பில் வழங்கப்பட்ட உயரிய மதிப்பளிப்பு என மதிப்பளிப்பு நிகழ்வுகள் நிறைவுற்றன.
அதனைத் தொடர்ந்து, அரங்கம் நிறைந்த மக்களின் நெஞ்சங்களை உலுக்கிய “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற உன்னதப் பாடலின் கூட்டு முழக்கத்தோடும், மாசற்ற உறுதிமொழியுடனும் போலோனியா திலீபன் தமிழ்ச்சோலையின் முப்பதாண்டு நிறைவு விழா வரலாற்றுப் பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இனிதே நிறைவுற்றது.





















































