2ம் நாளாக (03.09.2021) தொடரும் ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப்பயணம்
கடந்த 02/09/2021 அன்று பிரித்தானியாவில் பெரும் மக்கள் எழுச்சியோடு தமிழீழத்தின் விடுதலை வேண்டியும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டியும் பல கட்டமாக அரசியல் சந்திப்புக்களினை மேற்கொண்டவாறு நேற்று காலை 03/09/2021 நெதர்லாந்தில் அமைந்துள்ள அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இருந்து மனித நேய ஈருருளிப்பயணம் தொடர்ந்தது.
ஐக்கிய நாடுகள் அவை எதிர்வரும் கூட்டத்தொடர்களில் பரிந்துரைக்க இருக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் தாம் பூரண ஒத்துழைப்பு வழங்க இருப்பதாகவும் நெதர்லாந்தின் வெளிநாட்டு வெளிவிவகார அமைச்சிடம் நடாத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது. மேலும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் தாம் முன்னெடுத்து நடாத்தும் அறவழிப்போராட்டங்களே சர்வதேச மட்டத்தில் தமிழர்களுக்கு நியாயமான தீர்வுக்கான அழுத்ததினை பிரயோகிக்கும் என்பதனையும் தெரிவித்திருந்தார்கள்.
அதனைத்தொடர்ந்து அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன் நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் நெதர்லாந்து வாழ் மக்களும் எழுச்சியோடு கலந்து கொண்டு மனித நேய ஈருருளிப்பயணத்திற்கு வலுச் சேர்த்தார்கள். சம நேரத்தில் தமிழினப் படுகொலைசார்ந்த ஆவணங்கள் அடங்கிய மனு அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் கையளிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்த பயணத்தின் போது Rotterdam மாநகரசபையிலும் மனு கையளிக்கப்பட்டு இன்று (04.09.2021) மீண்டும் Rotterdam மாநகரசபை முன்றலில் இருந்து Breda நோக்கி மனித நேய ஈருருளிப்பயணம் பயணிக்க இருக்கின்றது. எதிர் வரும் 06.09.2021 அன்று பிற்பகல் 13 மணி அளவில் பெல்சியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலும், பெல்சிய வெளி நாட்டு வெளிவிவகார அமைச்சுடனுமான கலந்துரையாடல் நடைபெற இருக்கின்றது. அத்தோடு பெல்சிய வாழ் மக்களின் பேரெழுச்சியோடு கவனயீர்ப்பு போராட்டமும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
விடுதலைக்கான பயணம் தொடரும்…
“இலட்சியத்தில் ஒன்றுபட்டு உறுதிபூண்ட மக்களே வரலாற்றைப் படைப்பார்கள்” தமிழீழத் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.